ஏகாம்பரநாதர் கோவிலில் உற்சவம் திடீர் நிறுத்தம்!

8237530296_cb7743be36_z

ஏகாம்பரநாதர் கோவிலில், உற்சவர் சிலை சேதமடைந்துள்ளது எனக் கூறி, உற்சவம் நிறுத்தப்பட்டுள்ளது. பழைய உற்சவர் சிலையை மாற்றி, புதிய சிலை கொண்டு வருவதற்காக, தவறான தகவல் பரப்பப்படுகிறது என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. இது, பக்தர்களிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. காஞ்சிபுரத்தில், 108 சிவாலயங்கள், 18 விஷ்ணு கோவில்கள் அமைந்துள்ளன. இதில், புகழ் பெற்றது ஏகாம்பரநாதர் கோவில். பஞ்ச பூத ஸ்தலங்களில், ப்ருத்வி (மண்) ஸ்தலமாகும். பழமையான இக்கோவிலின் ஸ்தல விருட்சம் மாமரம். இங்கு, 3,500 ஆண்டுகள் பழமையான மாமரம் இருந்தது. சில ஆண்டுகளுக்கு முன், அம்மரம் பட்டுப்போனது. அந்த இடத்தில், தற்போது புதிய மரம் வளர்ந்துள்ளது.இக்கோவிலின் மூலவர், மணல் லிங்கம். எனவே, மூலவருக்கு அபிஷேகம் கிடையாது. உற்சவருக்கு மட்டுமே அபிஷேகம் நடைபெறும். உற்சவர் சிலை மிகவும் பழமையானது; பஞ்ச லோகங்களால் உருவாக்கப்பட்டது. இதில், 75 சதவீதம் தங்கம் என, கூறப்படுகிறது.

அதிர்ச்சி: கோவில் உற்சவ நாட்களில், உற்சவர் ராஜ வீதிகளில் வலம் வருவது வழக்கம். கடந்த பங்குனி பிரம்மோற்சவத்தின் போது, சுவாமி வீதியுலா நடந்தது. அதன்பின், உற்சவர் சிலை பழுதடைந்துள்ளதாகக் கூறி, சிலையை மாற்றும்படி, அர்ச்சகர்கள் சார்பில், கோவில் நிர்வாகத்திடம் மனு அளிக்கப்பட்டது. மேலும், பழுதை காரணம் காண்பித்து, வசந்த உற்சவம் நடத்தவில்லை. உற்சவத்தின்போது, சுவாமி வீதியுலா நடத்த வேண்டும் என்பதால், உற்சவம் நடத்தவில்லை. ஆனால், உற்சவருக்கு தினமும் வழக்கமான அபிஷேகம் நடக்கிறது. உற்சவர் சிலை பழுது எனக் கூறி, உற்சவம் நடைபெறாமல் இருப்பது, பக்தர்களிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், புதிய உற்சவர் சிலையை கொண்டு வர வேண்டும் என்பதற்காகவே, பழைய சிலை சேதமடைந்துள்ளதாகக் கூறுகின்றனர். பழைய உற்சவர் சிலை சேதமடைந்திருந்தால், அதை பழுது பார்த்து, அதையே வீதியுலா கொண்டு வர வேண்டும். புதிய சிலையை பயன்படுத்தக் கூடாது என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. இதுகுறித்து, கோவில் முன்னாள் அறங்காவலர் குழு உறுப்பினர் ரகு கூறியதாவது: நான் அறங்காவலர் குழு உறுப்பினராக இருந்த போது, சங்கரமடம் சார்பில், புதிய உற்சவர் சிலை உருவாக்கி, கோவிலுக்கு வழங்கப்பட்டது. அதை பயன்படுத்த, அர்ச்சகர்கள் முயற்சித்த போது, நான் எதிர்ப்பு தெரிவித்தேன். தற்போதுள்ள உற்சவர் சிலை, மிகவும் பழமையானது; அதை மாற்றக் கூடாது.

புதிய சிலை: இந்த சிலை 3,500 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது. சிலையில் பழுது இருந்தால், அதை சரி செய்து பயன்படுத்த வேண்டும் என, வலியுறுத்தினேன். அதை தொடர்ந்து, உற்சவர் சிலையை மாற்றும் திட்டம் கைவிடப்பட்டது. தற்போது, மீண்டும் புதிய சிலையை கொண்டு வருவதற்காக, திட்டமிட்டு உற்சவத்தை நிறுத்தி உள்ளனர். பழைய சிலை பழுதடைந்திருந்தால், அதை புதுப்பித்து பயன்படுத்த வேண்டும். புதிய உற்சவர் சிலையை பயன்படுத்தக் கூடாது. இவ்வாறு, அவர் தெரிவித்தார். பழைய சிலை பழுதடைந்திருந்தால், அதை புதுப்பித்து பயன்படுத்த வேண்டும். புதிய உற்சவர் சிலையை பயன்படுத்தக் கூடாது

நாளை மறுநாள் ஆய்வு: கோவில் உதவி கமிஷனர் முருகேசன் கூறியதாவது: தற்போதுள்ள உற்சவர் சிலையில், அடிப்பாகம் பழுதடைந்துள்ளது. எனவே, சிலையை மாற்றும்படி, அர்ச்சகர்கள் மனு கொடுத்துள்ளனர். சிலை பழுது காரணமாக, வசந்த உற்சவம் நடத்தவில்லை. சிலையை மண்டல ஸ்தபதி, ஆய்வு செய்துள்ளார். தலைமை ஸ்தபதி முத்தையா, நாளை மறுநாள் ஆய்வு செய்ய உள்ளார். அவர்கள் சிலையை பழுது பார்த்து, பயன்படுத்த முடியுமா அல்லது புதிய சிலை பயன்படுத்தலாமா என, தெரிவிப்பர். அவர்கள் தரும் அறிக்கை, இந்து சமய அறநிலையத் துறை கமிஷனருக்கு அனுப்பப்படும். அதன் பின்னே, இறுதி முடிவு எடுக்கப்படும். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

Leave a Reply