கடந்த 2013ஆம் ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் கண்டுபிடிக்கப்பட்ட ‘ஸ்பாட்பிக்சிங்’ என்னும் சூதாட்டம் குறித்து பதிவு செய்யப்பட்ட வழக்கு ஒன்றில் சூதாட்டத்தில் ஈடுபட்ட ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சேர்ந்த ஸ்ரீசாந்த், அங்கீத் சவான், அஜீத் சண்டிலா ஆகிய 3 வீரர்களுக்கு ஆயுள்கால தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த சூதாட்டத்தில் ஐ.பி.எல் அணிகளை சேர்ந்த நிர்வாகிகளுக்கும் தொடர்பு இருப்பதாக எழுந்த புகார்களை அடுத்து சுப்ரீம் கோர்ட்டின் மேற்பார்வையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. ஓய்வுபெற்ற நீதிபதி முத்கல் கமிட்டி தலைமையிலான குழு ஸ்பாட்பிக்சிங் சூதாட்டம் குறித்து கடந்த சில மாதங்களாக விசாரணை நடத்தி தனது அறிக்கையை சமீபத்தில் சுப்ரீம் கோர்ட்டில் சமர்பித்தது.
அந்த அறிக்கையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கவுரவ உறுப்பினர் குருநாத் மெய்யப்பன், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி உரிமையாளர்களில் ஒருவரான ராஜ்குந்த்ரா ஆகியோருக்கு ஸ்பாட்பிக்சிங் சூதாட்டத்தில் தொடர்பு இருப்பதாக அந்த குழு தெரிவித்ததோடு, இருவரையும் குற்றவாளி என அந்த அறிக்கை தெளிவாக கூறியுள்ளது. இதைத்தொடர்ந்து ஐ.பி.எல். அணிகளின் நிர்வாகிகள் இந்திய கிரிக்கெட் வாரிய தேர்தலில் போட்டியிட கூடாது என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மற்றும் குருநாத் மெய்யப்பன், ராஜ்குந்த்ரா ஆகியோர் மீது என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பது பற்றி ஆய்வு செய்ய சுப்ரீம் கோர்ட்டு 3 பேர் கொண்ட குழுவை கடந்த ஜனவரி மாதம் நியமித்தது. சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையிலான இந்த குழுவில் ஓய்வு பெற்ற நீதிபதிகள் அசோக்பான், ஆர்.வி.ரவிந்திரன் ஆகியோர் இடம் பெற்று இருந்தனர். இவர்கள் மூவரும் கடந்த 6 மாதங்களாக இதுகுறித்து ஆய்வு செய்து இன்று தண்டனை விவரத்தை அறிவித்தனர்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாகத்தில் உள்ள குருநாத் மெய்யப்பன் பல்வேறு விதமான சூதாட்டங்களில் ஈடுபட்டுள்ளார். இதை தொடர்ந்து அவருக்கு கிரிக்கெட் தொடர்பான நடவடிக்கைகளில் பங்கேற்க வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதை போல ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உரிமையாளர்களில் ஒருவரான ராஜ்குந்த்ராவும் பல்வேறு விதமான சூதாட்டங்களில் ஈடுபட்டுள்ளார். அவருக்கும் வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது. கிரிக்கெட் தொடர்பான நடவடிக்கைகளில் அவரும் ஈடுபட முடியாது. மேலும் சூதாட்டத்தில் ஈடுபட்டதை தொடர்ந்து ஐ.பி.எல். போட்டியில் பங்கேற்க சென்னை அணிக்கு 2 ஆண்டு காலம் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னை அணியை நிர்வகித்து வந்த இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்துக்கும் 2 ஆண்டு கால தடை விதிக்கப்படுகிறது. அதுபோல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும் ஐ.பி.எல். போட்டியில் பங்கேற்க 2 ஆண்டுகள் தடை விதிக்கப்படுகிறது” என கூறப்படுள்ளது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.