தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து தவறான செய்தி வெளியிட்டதாக பிரபல இணையதளம் Rediff இணையதளம் மீது முதல்வர் சார்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து சில சர்ச்சைக்குரிய செய்திகள் வெளியாகி வருகின்றது. தமிழக எதிர்க்கட்சி தலைவர்களும் முதல்வரின் உடல்நலம் குறித்து அவ்வபோது கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்நிலையில் முதல்வரின் உடல்நலம் குறித்து சர்ச்சைக்குரிய செய்திகளை வெளியிட்டதாக ரெடிப் இணையதளம் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முதல்வர் ஜெயலலிதா சார்பில் அரசு தலைமை வழக்கறிஞர் எம்.எல்.ஜெகன் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:
‘ரெடிப் டாட் காம்’ என்ற பெயரில் செயல்படும் இணையதளத்தில், “முதல்வர் ஜெயலலிதாவுக்கு உடல் நிலை சரியில்லை என்று சென்னை பத்திரிகையாளர்களுக்கு நன்றாக தெரியும். இருப்பினும், அவர்கள் அமைதி காக்கின்றனர்” என்ற தலைப்பில் கடந்த 10-ம் தேதி தவறாக செய்தி வெளியானது.
முதல்வர் ஜெயலலிதாவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் உள்நோக்கத்துடன் இந்த செய்தியை ‘ரெடிப் டாட் காம்’ வெளியிட்டுள்ளது. முதல்வரின் உடல்நலம் குறித்த தகவலை நேரடியாகவோ, தனிப்பட்ட முறையிலோ சரிபார்க்காமல் செய்தி வெளியிட்டுள்ளனர்.
எனவே, இந்த அவதூறு செய்தி வெளியிடுவதற்கு காரண மான ரெடிப் இணையதளத்தின் செய்தியாளர் ஆர்.ராமசுப்பிர மணியன், தலைமை செயல் அதிகாரி அஜித் பாலகிருஷ்ணன், முதன்மை ஆசிரியர் நிகில் காக்ஸ் மென், மூத்த இணை ஆசிரியர் அபிஷேக் பாண்டே ஆகியோர் மீது இந்திய தண்டனை சட்டம் 500-ம் பிரிவின் கீழ் நடவடிக்கை எடுத்து தண்டிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வழக்கு, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி ஆதிநாதன் முன்பு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.