பிரதமரின் நிதி ஆயோக் கூட்டம். ஜெயலலிதா, மம்தா உள்பட 12 முதல்வர்கள் புறக்கணிப்பு
நேற்று பாரத பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற நிதி ஆயோக் ஆலோசனைக் கூட்டத்தை தமிழக முதல்வர் ஜெயலலிதா, மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி உட்பட 12 மாநில முதல்வர்கள் புறக்கணித்துள்ளனர்.
இந்திய பிரதமராக நரேந்திர மோடி பதவி ஏற்றதும் ’நிதி ஆயோக்’ என்ற அமைப்பை உருவாக்கி அதன் தலைவராகவும் அவர் செயல்பட்டு வருகிறார். இதில் அனைத்து மாநில முதல்வர்கள், யூனியன் பிரதேசங்களின் துணை நிலை ஆளுநர்கள் ஆகியோர் உறுப்பினர்களாக இடம் பெற்றுள்ளனர். இந்த அமைப்பில் ஒவ்வொரு மாநிலங்களின் வளர்ச்சி திட்டங்கள், அதில் மத்திய அரசின் பங்கு மற்றும் மத்திய அரசு செயல்படுத்த உள்ள திட்டங்கள், நிறைவேற்ற வேண்டிய மசோதாக்கள் குறித்து அவ்வப்போது விவாதிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், நேற்று பிரதமரின் ரேஸ் கோர்ஸ் சாலை இல்லத்தில் நில மசோதா குறித்து விவாதம் செய்ய நிதி ஆயோக் கூட்டம் கூட்டப்பட்டது. பிரதமர் மோடி கூட்டத்துக்கு தலைமை தாங்கிய இந்த கூட்டத்தில் பாரதீய ஜனதா கட்சி ஆட்சி செய்யும் மாநில முதல்வர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். ஆனால் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி முதல்வர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தனர்.
காங்கிரசின் 9 மாநில முதல்வர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. மத்திய அரசு கொண்டுவர உள்ள நிலம் கையகப்படுத்தும் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்கு வங்காள மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கூட்டத்தை புறக்கணித்தார். ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக், உத்தரப்பிரதேச மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ் ஆகியோர் பல்வேறு அலுவல் காரணமாக கூட்டத்தில் பங்கேற்க முடியவில்லை என்று தெரிவித்துள்ளனர். ஆனால் இந்த கூட்டத்தில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பீகார் முதல்வர் நிதிஷ்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர். தமிழக முதல்வர் ஜெயலலிதா அரசு அலுவல்கள் அதிகம் இருப்பதால் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க இயலவில்லை என்று ஜெயலலிதா பிரதமர் மோடிக்கு விளக்க கடிதம் அனுப்பியுள்ளார்.