விமான பயணிகளை பரிசோதிக்க ‘இ கேட்’ பரிசோதனை. பெங்களூரில் அறிமுகம்

egateஇந்தியாவில் முதல்முறையாக பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் பயணிகளின் நுழைவுசீட்டை பரிசோதிக்க‌ கணினி மூலமாக இயங்கும் அதி நவீன `இ-கேட்’ பரிசோதனை முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முதல்கட்டமாக இந்த பரிசோதனை உள்நாட்டு விமான மையத்தில் மட்டும் செயல்படுத்தப்பட்டுள்ளது. ‘இ கேட்’ முறைக்கு விமானப் பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ள‌தாக செய்திகள் வெளிவந்துள்ளது.

இந்த நவீன முறையில் பயணிகள் சோதனை மிக எளிதாக நடைபெறுவதுடன் நேரமும் மிச்சமாகிறது என்று கூறப்படுகிறது. பயணிகள் தங்களது நுழைவுச் சீட்டில் உள்ள `2-டி’ பார்கோட் அல்லது செல்போனில் உள்ள நுழைவு சீட்டை அதற்கான பகுதியில் காட்டினால், `இ-கேட்’ அந்த டிக்கெட்டை ஆராய்ந்து சரியானதாக இருந்தால் தானாக திறந்து பயணியை உள்ளே செல்ல அனுமதிக்கும். மேலும் பயணி குறித்த தகவல்களும் திரையில் தெரியும்.

இதனை அடுத்து பயணிகள் மிக எளிதாக சோதனையிடும் பகுதிக்கும், விமானம் ஏறும் பகுதிக்கும் செல்ல முடியும். இ-கேட் அமைந்துள்ள பகுதி சிசிடிவி மூலமாக முழுவதும் கண்காணிக்கப்படுகிறது.

இந்த திட்டத்தின் மூலம் பயணச் சீட்டு, நுழைவுச் சீட்டு ஆகியவற்றை பணியாளர்கள் மூலம் பரிசோதிப்பது உள்ளிட்ட பணிகள் முற்றிலுமாக குறையும். முதல் கட்டமாக இந்த இ-கேட் திட்டம் உள்நாட்டு விமான முனையத்தில் ஒரு குறிப்பிட்ட பாதையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு பயணிகளிடம் கிடைக்கும் வரவேற்பை பொறுத்து அடுத்தடுத்து ‘இ கேட்’ முறை விரிவாக்கம் செய்யப்படும் என விமான நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Leave a Reply