மதுரை அருகே சிவகங்கை மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் சுமார் 2200 ஆண்டுகளுக்கு முந்தைய பழமையான நகரம் ஒன்றினை அகழ்வாராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்துள்ளனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த தொன்மையான நகரம் குறித்து தொல்லியல் துணை அகழ்வாராய்ச்சியாளர் வீரராகவன் அவர்கள் செய்தியாளர்களிடம் கூறியபோது, “தென்தமிழகத்தின் முக்கிய நீராதாரமாக விளங்கும் வைகை நதி, மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரில் வெள்ளிமலை அருகிலிருந்து உற்பத்தியாகி தேனி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களின் வழியே பாய்கிறது. தொல்லியல் வளமிக்க பகுதியாக விளங்கினாலும் கூட இதுகாறும் வைகை நதி பள்ளத்தாக்கு பகுதியில் அகழாய்வு ஏதும் மேற்கொள்ளப்படவில்லை.
2013-14ல் மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வில் சுமார் 293 பல்வகை தொல்லியல் எச்சங்கள் கொண்ட ஊர்கள், வைகை நதி பள்ளத்தாக்கு பகுதியில் அடையாளம் காணப்பட்டன. அவற்றுள் மதுரை அருகே, சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ள கீழடி தொல்லியல் அகழாய்விற்கு தேர்ந்தெடுக்கப்பட்டது. இந்த ஊர் மதுரையிலிருந்து 12 கி.மீ தொலைவில், தென்கிழக்கு திசையில் ராமேஸ்வரம் செல்லும் பண்டைய வணிகப் பாதையில், வைகை நதியின் தென்கரையில் அமைந்துள்ளது.
தற்போதைய கீழடி ஊரிலிருந்து கிழக்கே ஒரு கிலோமீட்டர் தொலைவில், மணலூர் கண்மாயின் மேற்கரையில் பள்ளிசந்தை திடல் என்றழைக்கப்படும் தொல்லியல் மேடொன்று உள்ளது. தரையிலிருந்து சுமார் இரண்டரை மீட்டர் உயர்ந்து காணப்படும் இம்மேடு, தற்பொழுது தென்னந்தோப்பாக பயன்பாட்டில் உள்ளது. முன்பு நிலத்தினை உழும்பொழுது பலவகையான மட்கலன்கள், தொல்பொருட்கள், பெரிய அளவிலான சுட்ட செங்கற்கள் மற்றும் கூரை ஓடுகள் இங்கு கிடைக்க பெற்றுள்ளன. இம்மேட்டின் கிழக்கே சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் கொந்தகை என்ற ஊருக்கு செல்லும் பாதையில், இதனோடு தொடர்புடைய ஈமக்காடும் அமைந்துள்ளது. இங்கு பல ஈமத்தாழிகள் சிதைந்த நிலையில் காணப்படுகின்றன.
கீழடி மற்றும் கொந்தகை உள்ளடக்கிய பகுதிகள் பிற்காலப் பாண்டியர் காலத்தில் ‘குந்திதேவி சதுர்வேதிமங்கலம்’ என்ற பெயரில் அழைக்கப்பட்டுள்ளது. கீழடியுள்ள அர்ஜுனேஸ்வரர் கோயிலில் காணப்படும் 12 மற்றும் 13ஆம் நூற்றாண்டு கல்வெட்டுகளில், ‘வேலூர் குளக்கீழ்’ என்ற நாட்டு பிரிவின் கீழ் அமைந்திருந்ததாக குறிக்கப்படுகிறது. இதேபோன்று பல்வகை தொல்லியல் ஆதாரங்கள் இருந்தும்கூட வைகை நதி பள்ளத்தாக்கு பகுதியில் விரிவான தொல்லியல் அகழாய்வு ஏதும் இன்று வரை மேற்கொள்ளப்படவில்லை. அனுப்பானடி, பரவை, கோவலன் பொட்டல், தி.கல்லுபட்டி, சங்க கால பாண்டியர்களின் துறைமுகமாக இருந்த அழகன்குளம் போன்ற இடங்களில் சிறிய அளவில் மாத்திரமே அகழாய்வு நடைபெற்றுள்ளது.
இவற்றினை அடிப்படையாக வைத்து, நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறையால் வைகை நதி பள்ளத்தாக்கு பகுதியில், இரும்புக் காலம் முதல் பல்வேறு காலக்கட்டங்களில் ஏற்பட்ட பண்பாட்டு வளர்ச்சி மற்றும் உருமாற்றத்தினை அறிந்து கொள்ளும் வகையில், சிவகங்கை மாவட்டம், கீழடி கிராமத்தில் நடப்பாண்டில் தொல்லியல் அகழாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மார்ச் மாதம் முதல் நடைபெற்று வரும் அகழாய்வில், கி.மு 3ஆம் நூற்றாண்டு முதல் கி.பி 3ஆம் நூற்றாண்டை சார்ந்த தொல்லியல் எச்சங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. இவற்றுள் பெரிய அளவிலான சுட்ட செங்கற்களை கொண்டு கட்டபட்ட கட்டட பகுதிகள், பெரிய கூரை ஓடுகள், முத்து மணிகள், கண்ணாடி மற்றும் பல்வகையான கல்மணிகள், சங்கு வளையல்கள், சுடுமண் பொம்மைகள், அம்மி, குழவி, இரும்பு, செப்பு பொருட்கள் போன்றவை அடங்கும்.
ரோமானிய நாட்டுடன் இவ்விடம் வணிகத் தொடர்பு கொண்டிருந்ததற்கு சான்றளிக்கும் வகையில், வணிகர்களால் கொண்டு வரப்பட்ட ரூலட் மற்றும் அரிட்டைன் வகை மண்பாண்ட துண்டுகள் கிடைக்கப் பெற்றுள்ளன. மேலும் வரலாற்று தொடக்க காலத்தை சேர்ந்த கருப்பு சிவப்பு மண்பாண்ட வகை, வெள்ளை வண்ணம் பூசப்பட்ட கருப்பு சிவப்பு மண்பாண்ட வகை மற்றும் ரசட் கலவை பூசப்பட்ட மண்பாண்ட வகையும் அகழாய்வில் கிடைத்துள்ளன.
இது தவிர்த்து தனி நபர்களின் பெயருடன் தமிழ் பிராமி எழுத்துப் பொறிப்பு கொண்ட மண்பாண்ட ஓடுகள் இங்கு கிடைத்திருப்பது குறிப்பிடதக்கதாகும். மேலும் விரிவான அகழாய்வுக்கு கால அவகாசத்தை மேலும் ஒரு வருடம் நீட்டித்து தரக்கோரி இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறையிடம் கேட்டிருக்கிறோம். முதன்மை அகழ்வாராய்ச்சியாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமையில் 4 அகழ்வாராய்ச்சியாளர்கள் மற்றும் அக்ழாய்வு துறை மாணவர்கள் சிலரும் ஆய்வு செய்து வருகிறோம். மக்களின் வாழ்வாதாரத்திற்கும் அதே சமயம் எங்களின் ஆய்விற்கும் இடையூறு ஏற்படாமல் ஆய்வு செய்து வருவதால் ஊர்மக்களும், நில உரிமையாளர்களும் சிறந்த ஒத்துழைப்பு தருகிறார்கள்”
இவ்வாறு தொல்லியல் துணை அகழ்வாராய்ச்சியாளர் வீரராகவன் கூறியுள்ளார்.