மானாட மயிலாட நிகழ்ச்சிக்கு பதிலாக கருணாநிதி, மின்துறைக்கு நேரம் ஒதுக்கியிருக்கலாம். விஸ்வநாதன்
சமீபத்தில் திமுக தலைவர் கருணாநிதி விடுத்த அறிக்கை ஒன்றில் கடந்த 4 ஆண்டுகால அ.தி.மு.க. ஆட்சியில் அறிவிக்கப்பட்ட மின் திட்டங்களால் ஒரு மெகாவாட் மின்சாரமாவது கிடைத்துள்ளதா? என்றும், சூரியசக்தி மின்சாரம் குறைவான விலைக்கு கிடைக்கும்போது ஒரு யூனிட் மின்சாரம் ரூ.7.01-க்கு வாங்க அதானி குழுமத்துடன் ஒப்பந்தம் செய்துகொண்டது ஏன்? என்றும் கேள்வி எழுப்பினார். அவருடைய கேள்விகளுக்கு தமிழக மின்துறை அமைச்சர் விசுவநாதன் காட்டமாக பதிலடியுடன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அமைச்சர் விஸ்வநாதனின் அறிக்கையின் முழுவிபரம் வருமாறு: கொட்டைப்பாக்குக்கு விலை கூறும் விசுவநாதன் பதில்’ என்ற தலைப்பில் திமுக தலைவர் வழக்கம் போல மீண்டும் பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி மக்களை திசை திருப்பும் வகையில் அறிக்கை ஒன்றை 13.7.2015 அன்று மீண்டும் விடுத்துள்ளார். பல பொய்களை கட்டவிழ்த்து, அதனை உண்மையாக்க முயற்சி செய்யும் கருணாநிதியின் கோயபல்ஸ் வேலை தமிழ்நாடு மக்களுக்கு தெரிந்த ஒன்றுதான்.
அவ்வப்போது அவர் வெளியிடும் முன்னுக்கு பின் முரணான பொய்யான அவரது அறிக்கைக்கு தேவையான விளக்கங்களை புள்ளி விவரங்களுடன் அளித்ததுடன், என் கேள்விக்கு என்ன பதில் என சில கேள்விகளை பல்வேறு தருணங்களில் கேட்டிருந்தேன். இப்போதும் அவரை கேட்கிறேன்.
கூடுதல் விலை கொடுத்து தனியாரிடம் மின்சாரம் அதிக அளவில் 20,355 மில்லியன் யூனிட் அளவிற்கு கொள்முதல் செய்தது யார் ஆட்சிக்காலத்தில்? திமுக ஆட்சிக் காலத்தில்தானே! ஆனால், மாண்புமிகு அம்மா அவர்களின் ஆட்சிக்காலத்தில் 11,075 மில்லியன் யூனிட் மட்டுமே தனியாரிடம் மின்கொள்முதல் செய்யப்பட்டது. அதுவும் தேவைக்கேற்ப தவிர்க்க முடியாத சில நேரங்களில் மொத்த கொள்முதலில் வெறும் 3 சதவீதம் மட்டுமே மின் கொள்முதல் செய்யப்பட்டது. இதற்கு கருணாநிதி ஏன் பதில் அளிக்கவில்லை?
திமுக ஆட்சிக் காலத்தில், 4 தனியார் நிறுவனங்களுடன் அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்குவதற்கு கீழ்கண்ட தேதிகளில் ஒப்பந்தங்கள் போடப்பட்டு மின் கொள்முதல் செய்யப்பட்டது. ஒப்பந்தம் போட்டதும் நீங்கள்தான். அதிகமாக மின் கொள்முதல் செய்ததும் நீங்கள்தான். இதை மறுக்க முடியுமா? செய்வதையெல்லாம் செய்துவிட்டு பழியை எங்கள் மீது போடுவது எந்தவிதத்தில் நியாயம்?
மாண்புமிகு அம்மா ஆட்சி காலத்தில்தான் கீழ் வரும் மின் திட்டங்களுக்கான ஆணைகள் பிறப்பிக்கப்பட்டு, மின் உற்பத்தியும் மாண்புமிகு அம்மா ஆட்சி காலத்திலேயே தொடங்கப்பட்டது என்பதை மூடிமறைத்துவிட்டு, இத்திட்டங்கள் திமுக ஆட்சிக் காலத்தில்தான் ஏற்படுத்தப்பட்டது என்று பொய் சொல்கிறீர்களே இது நியாயமா?
திமுக ஆட்சிக் காலத்தில் பல மின் திட்டங்களின் பணிகளை செயல்படுத்தாமல் கிடப்பில் போட்டதற்கு என்ன காரணம்? பத்து பைசாவிற்கு கூட பிரயோஜனம் இல்லை என கருணாநிதி கருதியதுதான் காரணமா? மேலும் தனியாரிடம் அதிக விலை கொடுத்து மின் கொள்முதல் செய்வதற்காகவா?
திமுக ஆட்சிக் காலத்திற்குள் பணிகளை முடித்து உற்பத்தியை தொடங்கியிருக்க வேண்டிய பல திட்டங்களில் 40 – 45 சதவீத வேலை மட்டுமே முடிக்கப்பட்டிருந்தது. மாண்புமிகு அம்மா அவர்களின் ஆட்சிக்காலத்தில் மீதமுள்ள பணிகள் அனைத்தும் புயல் வேகத்தில் செய்து முடிக்கப்பட்டு உற்பத்தி தொடங்கப்பட்டதா இல்லையா?
மானாட மயிலாட நிகழ்ச்சிக்காக செலவிட்ட நேரத்தில், சிறிது நேரத்தை மின்துறைக்காக ஒதுக்கியிருந்தால், தமிழ்நாட்டில், உங்கள் ஆட்சிக் காலத்தில் நிலவி வந்த 10 முதல் 12 மணி நேரம் மின் வெட்டை தவிர்த்திருக்கலாம் அல்லவா?
திமுகவின் ஆட்சிக் காலத்தில் உடன்குடி திட்டத்தை தொடங்க விரும்பாமல் கிடப்பில் போட்டுவிட்டீர்கள். பத்து பைசாவிற்கு கூட பிரயோஜனம் இல்லை என்பதால் கிடப்பில் போட்டீர்களா? மாண்புமிகு அம்மா அவர்களால் உடன்குடி திட்டம் செயல்படுத்தப்படக் கூடாது என கங்கணம் கட்டி, திட்டங்கள் வராமல் இருக்க குறுக்கு வழிகள் அனைத்தையும் கையாண்டு, சீன நிறுவனத்தின் கூட்டு நிறுவனமான தனியார் நிறுவனத்துடன் கைகோர்த்து வழக்கு தொடுத்து திட்டத்தை தடுத்து நிறுத்துவதற்கு பின்னணியில் இருப்பவர்கள் ஸ்டாலின் குடும்பத்தினர் என்று செய்தி வருகிறதே! இது உண்மையா?
பல கேள்விகள் என்னால் கேட்கப்பட்டும், அதற்கு பதில் அளிக்காமல் கல்லுளிமங்கனாக இருந்துவிட்டு, ஆழ்ந்த உறக்கத்திற்குப் பின்னர் பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால், கொட்டை பாக்கு விலை பத்து பைசா என கூறி மீண்டும் அறிக்கை விட்டுள்ளார்.
ஆதாயமின்றி எந்த ஒரு காரியத்தையும் செய்ய எண்ணாத கருணாநிதிக்கு, மல்லாந்து துப்பினால் மார்பின் மேலே என்பது போல, அவரையே அவர் அசிங்கப்படுத்திக்கொள்கிறார்.
12.9.2014 அன்று தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையம் வெளியிட்ட ஆணையை, தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையமே சுயமாக 1.4.2016 வரை நீட்டித்தது. கருணாநிதி கூறி உள்ளது போல் அதானி குழுமம் சூரிய மின் உற்பத்தி நிலையங்கள் நிறுவிடும் பொருட்டு மேற்குறிப்பிட்ட கால நீட்டிப்பு செய்யப்படவில்லை.
அவதூறான அறிக்கைகளை அவ்வப்போது வெளியிட்டு மக்களை திசை திருப்ப முயற்சிக்கும் கருணாநிதியையும், சில கத்துக்குட்டி அரசியல்வாதிகளையும் மக்கள் நன்கு அறிவர். கருணாநிதியின் கபட நாடகம் தமிழ்நாட்டு மக்களிடம் ஒருபோதும் எடுபடாது. எனவே, பொய்யான அறிக்கைகளின் மூலம் தமிழக மக்களை ஏமாற்றும் முயற்சியில் இனிமேல் இறங்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்” எனக் கூறியுள்ளார்.