பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு சம்பளத்துடன் 3 மாதம் விடுமுறை
அலுவலகங்களில் பணிபுரியும் பெண்கள் பாலியல் பலாத்காரத்தினால் பாதிக்கப்பட்டால், அவர்களுக்கு மூன்று மாதங்கள் சம்பளத்துடன் கூடிய விடுப்பு அளிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. அதுமட்டுமின்றி இந்த விடுமுறை அந்த பெண் ஊழியரின் ஆண்டு விடுமுறை கணக்கில் இருந்து கழிக்கப்படமாட்டாது என்றும் மத்திய அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. மத்திய அரசின் இந்த திட்டத்திற்கு பெரும் வரவேற்பு கொடுத்துள்ள பொதுமக்கள், ‘பாலியல் பலாத்காரத்தினால் பாதிக்கப்பட்ட ஒரு பெண், இந்த விடுமுறையில் தன்னை மனதளவிலும், உடலளவிலும் தயார்படுத்தி கொள்ள பயனுள்ளதாக இருக்கும் என பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் அச்சுறுத்தல்கள் அதிகரித்து வருகின்றன. வயது வித்தியாசம் பாராமல் அவர்கள் மீது பாலியல் தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன. இதுபோன்ற சூழலில் பாதிக்கப்படும் பெண்கள் மன உளைச்சல் அடைந்து, சில நேரங்களில் தற்கொலைக்கும் முயற்சிக்கின்றனர்.
வேலைக்குச் செல்லும் பெண்கள், பணியிடங்களில் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டால், அவர்களது நிலைமை பரிதாபமான நிலைக்குத் தள்ளப்படுகிறது. சமூகத்தின் அவலப் பார்வையால் வீட்டிலேயே முடங்கி விடுகின்றனர். எனவே இந்த நிலையை மாற்ற, மத்திய அரசு புதிய திட்டத்தை வகுத்துள்ளது.
அதன்படி பணிக்குச் செல்லும் பெண்கள், பாலியல் ரீதியிலான துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டால், அவர்களுக்கு சம்பளத்துடன் கூடிய மூன்று மாத விடுமுறை வழங்கப்பட வேண்டும் என பணியாளர் மற்றும் பயிற்சித் துறை உத்தரவிட்டுள்ளது.