ஜடா முடியுடன் சிவ பெருமானின் முக்கண் உருவ தோற்றம் -தெற்கு முக தரிசனம்
இமயமலைத் தொடர்தான் உலகிலேயே மிக உயர்ந்த, ஒப்பற்ற, மாபெரும் மலைத் தொடராகும். இந்த மலைத் தொடர் எப்போதும் உறைபனி மூடி இருக்கும்.இங்கு தான் திருக்கைலாயம் உள்ளது.
எவன் ஒருவன் கைலாயத்தை கண்டு தரிசனம் செய்கின்றானோ அவனுடைய 21 தலைமுறைகள் முக்தி அடைகின்றன. முன்னோர்கள் (பித்ருக்கள்) பலர் செய்த புண்ணியத்தின் பலனாகவே ஒருவருக்கு இந்த ஜன்மத்தில் கைலாய மானசரோவர் தரிசனம் கிட்டும் என்கிறது புராணங்கள்
கைலாயம் என்பது சிவபெருமான், பார்வதி தேவி கணேசர்,முருகப்பெருமான் மற்றும் நந்தியுடன் உறையும் இடமாகும். இதனால் தான் சிவனை, கைலாசாவாசா என்கிறார்கள். சொர்க்க லோகத்திலிருந்து பூமியில் இறங்கிய புனித கங்கையை சிவபெருமான் தமது ஜடாமுடியில் தாங்கி இறக்கியது இம்மலையில் தான்.
உலகின் மைய அச்சுப் பகுதி இந்த மலையில் தான் உள்ளதாக அறிவியல் ஆய்வுகள் சொல்கிறது. பூமியில் இருந்து 6,638 மீட்டர் உயரத்தில் சுமார் 22,000 அடி உயரத்தில் இம்மலை உள்ளது.கைலாயமலையை சுற்றியுள்ள கிரிவலப்பாதை மொத்தம் 52 கிலோ மீட்டர் (32 மைல்) நீளம் கொண்டது. மலையின் நான்கு முகங்களும் பஞ்சமுகத்தோனின் பல்வேறு நிலைகளையும் பஞ்சபூதங்களையும் உணர்த்துகிறது. கைலாய மலையை சுற்றி கிரிவளம் வருவதை பரிகிரமா என்கிறார்கள்.
கைலாய மலையின் வடக்குமுகம் வாம தேவமுக தரிசனம் என்றும் தெற்கு முகம் அகோர முக தரிசனம் என்றும்,மேற்கு முகம் சத்யோஜாத முக தரிசனம் என்றும் கிழக்கு முக தரிசனம்
தத்புருஷ முக தரிசனம் என்றும் அழைக்கபடுகிறது.இதில் தெற்கு முகம் தான் இந்தியாவை நோக்கி உள்ளது.. தேவ லோகத்திலிருந்து பூலோகத்திற்கு கங்கை இறங்கிய ஜடா முடியும் சிவபெருமானின் மூன்று கண்களும் உள்ள முகம். மேலும் இம்முகத்தில் அடாத செயல் செய்த இராவணன் திருக்கயிலை மலையை கட்டி இழுத்த அக்ஷ்ய வட கயிற்றின் தழும்பும் உள்ளது.
இந்து மதம், புத்த மதம், சமண மதம், பொம்பா மதம் ஆகிய நான்கு மதத்தினருக்குப் புனிதத் தலமாக கைலாயமலை விளங்குகிறது.இதுவரை கைலாய மலையை யாரும் ஏறியது இல்லை. இது பல மதங்களின் புனிதத் தலமாகக் கருதப்படுவ தால் மலையேற அனுமதி கிடையாது. கைலாய மலை இமயமலையின் வடக்குப் பகுதியில் சீனா அரசின் கட்டுப்பாட்டில் உள்ள திபத்தில் இருக்கிறது.
இந்த மலை தொடர்களில் இருந்து தான் கங்கை, பிரம்மபுத்ரா, சிந்து, ஐராவதி, யாங்சிகீ சட்லெட்ஜ் போன்ற ஆறுகள் உருவாகின்றன. கைலாய மலைப்பகுதியில் புகழ்மிக்க இரண்டு ஏரிகள் உள்ளன. அவை மானசரோவர் ஏரியும், ராட்சதலம் ஏரியும் ஆகும். மானசரோவர் ஏரி உலகிலேயே மிக உயரத்தில் உள்ள நல்ல நீர் உள்ள ஏரியாகும்.இது பிரம்மாவினால் உருவாக்கப்பட்டது.ராட்சதலம் ஏரியில் ராவணன் தவம் இருந்து வரம் பெற்றதாக வரலாற்றில் கூறப்பட்டுள்ளது
மானசரோவர் ஏரியும், சிந்து நதியும் கைலாய மலையின் புண்ணிய தீர்த்தங்கலாக கருதப்படுகின்றன. அப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகிய மூவரால் இத்தலம் பாடல் பெற்றுள்ளது. சேரமான் பெருமாள் இத்தலம் மீது ஞான உலா பாடியுள்ளார். கயிலை, கயிலாயம், நொடித்தான்மலை என்றெல்லாம் கைலாயம் அழைக்கப்படுகிறது