தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் சொத்து குவிப்பு வழக்கின் கர்நாடக உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து கர்நாடக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் வரும் 27ஆம் தேதி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் மேல்முறையீட்டு மனுமீதான விசாரணையில் நீதிபதி குமாரசாமி அளித்த தீர்ப்புக்கு தடை விதிக்கப்படுமா? என்பது குறித்து தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி குமாரசாமியின் தீர்ப்பில் கணக்குப்பிழை இருப்பதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்த நிலையில் அந்த தீர்ப்பை எதிர்த்து கர்நாடக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என தமிழக எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தன. இந்நிலையில் கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் கடந்த மாதம் மேல்முறையீடு செய்தது. ஆனால், அந்த மனுவில் 10 குறைபாடுகள் இருந்ததால், அதை சுட்டிக்காட்டிய உச்ச நீதிமன்றம் திருத்தப்பட்ட புதிய மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டது. இதன்படி கடந்த 11ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் புதிய திருத்தப்பட்ட மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதேபோல், தி.மு.க. சார்பில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் அன்பழகனும் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார். இந்த மனுவில் இருந்த 9 குறைபாடுகளை உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டிக்காட்டியது. இதையடுத்து, திருத்தப்பட்ட மேல்முறையீட்டு மனுவை கடந்த 16ஆம் தேதி அன்பழகன் தாக்கல் செய்தார்.
இந்நிலையில், ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில், கர்நாடக அரசு தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனுமீதான விசாரணை, வரும் 27ஆம் தேதி எடுத்துக்கொள்ளப்படும் என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.