வரி ஏய்ப்பு வழக்கு. கலாநிதி மாறனுக்கு டெல்லி நீதிமன்றம் சம்மன்
ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு, பி.எஸ்.என்.எல் நிறுவனத்திடம் இருந்து சட்டவிரோதமாக இணைப்புகள் எடுத்த வழக்கு, ஆகிய வழக்குகள் மாறன் சகோதரர்களை நெருக்கடிக்கு உண்டாகியிருக்கும் நிலையில் தற்போது புதிதாக ஸ்பைஸ் ஜெட் லிமிடெட் நிறுவனத்தின் வரி ஏய்ப்பு தொடர்பான வழக்கு ஒன்றும் இந்த சகோதரர்களை நெருக்கடி கொடுத்து வருகின்றது. இந்த வழக்கு தொடர்பாக கலாநிதி மாறன், ஸ்பைஸ் ஜெட் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் நட்ராஜன் ஆகியோருக்கு டெல்லி நீதிமன்றம் நேற்று சம்மன் அனுப்பியது.
கடந்த 2013-14ஆம் நிதியாண்டில் ஸ்பைஸ் ஜெட் நிறுவன ஊழியர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்பட்ட ரூ.110.6 கோடி டிடிஎஸ் தொகை, 2014-15-ம் நிதியாண்டுக்கான ரூ.36.5 கோடி டிடிஎஸ் தொகை உரிய காலத்தில் வருமான வரித்துறையிடம் செலுத்தப்படவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதுகுறித்து வருமான வரித் துறை டெல்லி நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு ஒன்று நேற்று கூடுதல் தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் பிரித்தம் சிங் முன்பு விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கை விசாரணை செய்த மாஜிஸ்திரேட், விமான போக்குவரத்து நிறுவனமான ஸ்பைஸ் ஜெட் லிமிடெட், அதன் முன்னாள் தலைவர் கலாநிதி மாறன், நிர்வாக இயக்குநர் நட்ராஜன் ஆகியோருக்கு சம்மன் அனுப்பியுள்ளார். மேற்கண்ட இருவரும் வரும் ஆகஸ்ட் 21ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி தனது உத்தரவில் கூறியுள்ளார்.