சட்டமன்ற தேர்தலின் முதன்மை பிரச்சாரமாக மது ஒழிப்பு-ஊழல் ஒழிப்பு. ஜி.கே.மணி

சட்டமன்ற தேர்தலின் முதன்மை பிரச்சாரமாக மது ஒழிப்பு-ஊழல் ஒழிப்பு. ஜி.கே.மணி

g.k.maniதமிழகத்தில் வரும் 2016ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் மது ஒழிப்பு, ஊழல் ஒழிப்பு இந்த இரண்டும்தான் முதன்மையான பிரசாரமாக இருக்கபோகிறது என பாமக தலைவர் ஜி.கே.மணி கிருஷ்ணகிரியில் நடைபெற்ற பாமக கூட்டத்தில் பேசியுள்ளார். அவர் மேலும் பேசியதாவது:

”ஒவ்வொரு மண்டலமாக மாநாடு நடத்திக் கொண்டிருக்கிறோம். சேலம், கங்கைகொண்ட சோழபுரம், கோவை  ஆகிய ஊர்களில் மாநாடுகளை நடத்தி முடித்திருக்கும் நிலையில், இப்போது நான்காவதாக வடக்கு மண்டல மாநாடு வேலூரில் நடக்கிறது. எந்தக் கட்சியும் இதுவரை இப்படி ஒரு மாநாடு நடத்தியது இல்ல்லை என்று சொல்லுகிற வகையில் மிகப் பிரம்மாண்டமாக நடக்க இருக்கிறது. இந்த மாநாட்டில் குறைந்தது 10லட்சம் பேர் கலந்து கொள்வார்கள்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான மக்களின் மேம்பாட்டுக்கான பிரச்னைகளை நோக்கங்களாக வைத்துதான் இந்த மாநாட்டை வைத்திருக்கிறோம். அதேபோல வடக்கு மண்டல மாநாட்டின் நோக்கம் மது ஒழிப்பு, லஞ்சம் ஊழல் ஒழிப்பு, சேவை பெறும் உரிமைச்சட்டம், லோக் ஆயுக்தா கொண்டு வருதல், தனிமனித முன்னேற்றத்திற்கும், நாட்டின் வளர்ச்சிக்கும்  அடிப்படையான தரமான கல்வியை அனைவருக்கும் இலவசமாக கிடைக்கச் செய்வது, நாட்டின் முதன்மைத் தொழிலான நலிந்துவரும் விவசாயம் செழிக்க பாசனத் திட்டங்களை உருவாக்கிடவும், வரலாறு காணாத மின்வெட்டால் முடங்கிக் கிடக்கும் தொழில்துறைய முன்னேற்றிடவும், வேலை இல்லாத் திண்டாட்டங்களை ஒழித்திடவும், தரமான மருத்துவ வசதிகளை அரசே வழங்க வேண்டும் என்பது போன்ற மிக முக்கியமான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் இந்த மாநாடு நடக்க இருக்கிறது.

பா.ம.க ஒவ்வொரு மண்டலமாக மாநாடு நடத்திவரும் வேளையில், மாற்றம், முன்னேற்றம், அன்புமணி என்பது தமிழகம் முழுக்க எதிரொலிக்க ஆரம்பித்துள்ளது. மாற்றம், முன்னேற்றம் என்று பொதுமக்களிடம் கோரிக்கை வைத்தது மட்டுமல்ல, கட்சிக்காரர்களுக்கும் கட்டளையிட்டிருக்கிறோம். பா.ம.க பொறுப்பாளர்கள் அனைவரும் எல்லோரிடத்திலும் அன்பாக நடந்து கொள்ள வேண்டும், பொதுமக்கள் பிரச்னைகளை சேவை நோக்கத்தோடு அணுக வேண்டும். மனம் நோகும்படி பேசவோ,  நடந்துகொள்ளவோ கூடாது என்று கட்டளை போட்டிருக்கிறோம்.

மது ஒழிப்பு, ஊழல் ஒழிப்பு இந்த இரண்டும்தான் வருகிற சட்டமன்றத் தேர்தலில் முதன்மையான பிரசாரமாக இருக்கபோகிறது. அதற்கு எல்லோரும் ஆதரவு தர வேண்டும். நிலம் கையப்படுத்தும் சட்டத்தை விடாப்பிடியாக மத்திய அரசு அமல்படுத்தப்பார்க்கிறது அதை கைவிட வேண்டும். விவசாயிகளுக்கு விவசாய கடனை தள்ளுபடி செய்துவிட்டு வட்டியில்லா கடன் வழங்க வேண்டும்”

இவ்வாறு ஜி.கே.மணி பேசியுள்ளார்

Leave a Reply