மதுவிலக்கு கொள்கைக்கு ராமதாஸ் மட்டும்தான் கார்டியனா? துரைமுருகன் கேள்வி

மதுவிலக்கு கொள்கைக்கு ராமதாஸ் மட்டும்தான் கார்டியனா? துரைமுருகன் கேள்வி

stalin and duraimurugan issue in assembly 000021சமீபத்தில் திமுக தலைவர் கருணாநிதி மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கு அமல்படுத்த தேவையான சாத்தியக்கூறுகள் பற்றி நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்தார். கருணாநிதியின் இந்த அறிவிப்புக்கு வரவேற்பும் எதிர்ப்பும் கிளம்பியுள்ள நிலையில் பாமக தரப்பில் இருந்து கருணாநிதிக்கு கடும் கண்டனத்துடன் கூடிய அறிக்கை ஒன்று நேற்று வெளியானது. கருணாநிதியை நம்பி இனிமேலும் தமிழக மக்கள் ஏமாற மாட்டார்கள் என்றும் இந்த அறிக்கையின் மூலம் கருணாநிதி தன்னுடைய பாவங்களுக்கு பரிகாரம் தேடி கொள்கிறார் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

பாமகவின் இந்த விமர்சனத்திற்கு இன்று திமுக முதன்மைச் செயலாளர் துரைமுருகன் பதிலடி கொடுத்துள்ளார். இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“திராவிட முன்னேற்றக் கழகம் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், சமுதாய மாற்றத்திற்கும், ஏற்றத்திற்கும் வழி வகுக்கும் வகையில் மதுவிலக்கை அமுல்படுத்த தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்று அறிவித்து ஓர் அறிக்கையை கழகத் தலைவர் கலைஞர் 20.7.2015 அன்று வெளியிட்டார்.

இந்த அறிவிப்பினை பல்வேறு கட்சித் தலைவர்களும், சமூக ஆர்வலர்களும், பல ஊடகங்களும் வரவேற்று கருத்துகளை வெளியிட்டிருக்கிறார்கள். இந்த நற்செய்தி ஊடகங்கள் மூலமாக உடனடியாக நாடு முழுவதும் பரவிவிட்டது.

செய்தியறிந்த தாய்மார்களும், பெரியவர்களும் தலைவர் கலைஞருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்த வண்ணமாக இருக்கிறார்கள். ஆனால் பா.ம.கட்சியின் ராமதாசுக்கு மட்டும் இந்த நற்செய்தி வேம்பென கசந்திருக்கிறது. கோபம் கொப்பளிக்க அவைகள் எல்லாம் வார்த்தைகளாக வடிவெடுத்து அவர் பெயரில் ஓர் அறிக்கையாக வெளி வந்திருக்கிறது.

“கருணாநிதி பாவ மன்னிப்பு கோருகிறார்” “ராஜாஜியை எள்ளி நகையாடினார்” “ஏமாற்றுகிறவர்” “கலைஞருக்கு ஞானோதயம் ஏற்பட்டிருக்கிறது’’ “மதுவிலக்கைக் கொண்டு வர கலைஞர் ஒரு துரும்பைக் கூடக் கிள்ளிப் போடவில்லை” “கலைஞரின் வாக்குறுதிகள் காற்றில் எழுதப்பட்ட எழுத்துக்கள்” “கலைஞரை, மக்கள் நம்பி ஏமாற மாட்டார்கள்”; இப்படிப்பட்ட அவதூறு அர்ச்சனைகளையெல்லாம் ராமதாஸ் தான் வெளியிட்ட அறிக்கையின் மூலம் தலைவர் கலைஞர் மீது வாரி இறைத்திருக்கிறார்.

1971ஆம் ஆண்டு வாக்கில் தமிழக அரசுக்கு ஏற்பட்ட கடுமையான நிதி நிலையைச் சமாளிப்பதற்காக தவிர்க்க முடியாத நிலையில் மதுவிலக்கை ஒத்தி வைக்க வேண்டிய நெருக்கடி ஏற்பட்டதை அன்றைய முதல்வர் கலைஞர் சட்ட மன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் உருக்கமாகப் பேசியதையும், 1971ல் கழக அரசு மதுவிலக்கை தற்காலிகமாக ஒத்தி வைத்தது என்றாலும், 1974ஆம் ஆண்டில் மீண்டும் மதுவிலக்கை அமல்படுத்தியதையும், 1981ஆம் ஆண்டில் எம்.ஜி.ஆர். கள்ளுக் கடைகளைத் திறந்ததையும், 1982-83இல் அ.தி.மு.க அரசு தனியார்களுக்கு ஐ.எம்.எப்.எல்., சாராய ஆலைகள் துவக்க தனியார்களுக்கு உரிமம் வழங்கியதையும், 2003ல் இன்றைய முதல் அமைச்சர் ஜெயலலிதா “டாஸ்மாக்” கடைகளையும், பக்கத்திலேயே “சாக்னா” கடைகளையும் திறந்ததையும் அப்படியே மூடி மறைத்து விட்டு, தலைவர் கலைஞர் மீது மட்டும் பழியையும், பாவத்தையும் சுமத்தப் பார்க்கிறார் டாக்டர் ராமதாஸ்.

மதுவிலக்குக் கொள்கைக்கு ராமதாஸ்தான் தான் “பிதாமகர்” போலவும், மதுவிலக்குக் கொள்கை அவருடைய “பிதுரார்ஜித” சொத்து போலவும், அவர் கருதிக் கொண்டிருப்பதால் தான், தலைவர் கலைஞரின் அறிவிப்பு, அவருடைய பட்டா நிலத்தில் பிரவேசித்து விட்டதைப் போல கோபப்பட்டு அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

1974இல் தலைவர் கலைஞர் மீண்டும் மதுவிலக்கை அமுல்படுத்தியது 2006ல் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்தவுடன் தமிழகம் முழுவதும் 1300 மதுக் கூடங்களை (பார்கள்) மூடியது, 128 சில்லறை மது விற்பனைக் கடைகளை மூடியது, ஆலயங்கள், பள்ளிக் கூடங்கள், கல்லூரிகள், மசூதிகள், தேவாலயங்கள் போன்ற பொது இடங்களுக்கு அருகில் மதுக்கடைகள் அமையக் கூடாது என்று ஆணை பிறப்பித்தது, மதுக் கடைகள் திறந்திருக்கும் நேரத்தில் ஒரு மணி நேரம் குறைத்தது இவையெல்லாம் தலைவர் கலைஞர் செய்தவைகள் அல்லவா?

ராமதாசுக்கு இவைகள் எல்லாம் தலைவர் கலைஞர் மதுவிலக்குப் பிரச்சினையில் செய்த சாதனைகளாக தெரியவில்லையா? இவைகள் எல்லாம் துரும்பைக் கிள்ளிப் போட்ட காரியங்களாகத்தான் டாக்டர் ராமதாஸ் தோன்றுகிறதா?

ஏமாற்றுகிறவர் கலைஞர் என்று கொஞ்சம் கூட கூச்சம் இல்லாது கூறுகிற டாக்டர் ராமதாசுக்கு ஞாபகப்படுத்துகிறேன் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்களுக்காக 20 சதவிகித இட ஒதுக்கீட்டினை தங்களை தைலாபுரத்திலிருந்து அழைத்து வந்து கொடுத்தாரே, அவரா ஏமாற்றுகிறவர்!

கடைசியாக ஒன்று! அண்ணல் காந்தி அடிகளுக்குப் பிறகு டாக்டர் ராமதாஸ் தான் மதுவிலக்குக் கொள்கைக்கு “கார்டியன்” என்ற நினைப்பு அவருக்கு! இந்த கொள்கையைப் பிடித்துக் கொண்டே, எப்படியாவது ஆட்சிக்கு வந்து விடலாமா என்ற நப்பாசை வேறு அவருக்கு! பா.ம.க. ஆட்சிக்கு வந்து விட்டால், அவருடைய திருக்குமாரன், முதலமைச்சராகி, மது விலக்கு குறித்து முதல் கையெழுத்திடுவார் என்கின்ற கற்பனை உலக சஞ்சாரம் அவருக்கு! இத்தனை கனவுகளையும் ஒரே நொடியில் தவிடுபொடி ஆக்கி விட்டாரே கலைஞர் என்ற கோபத்தின் வெளிப்பாடு தான்” என்று துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply