தோலில் கட்டிகள் உருவாவதற்கு, கிருமித் தொற்றுதான் மிக முக்கியக் காரணம். சருமம் சுத்தமாக இல்லையெனில், தோல் மற்றும் தோலின் கீழ்ப்பகுதியில் பலவிதமான கட்டிகள் தோன்றக்கூடும். நம் ஊரில், அதிகம் வரக்கூடியது வியர்வைக் கட்டி, கொழுப்புக் கட்டி, வெப்பக் கட்டிகள்தான். சுகாதாரமற்ற சூழலில் வசிப்பவர்கள், சர்க்கரை நோயாளிகள், உணவுக் கட்டுப்பாடு இல்லாதவர்கள், அடிக்கடி தொற்று நோயால் அவதிப்படுபவர்கள், உடல் உழைப்பு இல்லாதவர்கள், பீடி,சிகரெட் பிடிப்பவர்களுக்கு முதுகு, இடுப்பு, அக்குள், தொடை, கை, கால், போன்ற இடங்களில் அடிக்கடி கட்டிகள் வரலாம்.
கொழுப்புக் கட்டிகள்
பிறவியில் இருந்தோ, திடீரென்றோகூட இந்தக் கட்டி வரலாம். அதிக உடல் எடை, உடல்பருமன், கொலஸ்ட்ரால் போன்ற காரணங்களால்தான் கொழுப்புக் கட்டிகள் உருவாகிறதா என்பதை உறுதியாகச் சொல்ல முடியாது. மரபியல் காரணங்களாலும்கூட வரலாம்.
வெளியில் தோல் போன்று இருக்கும். ஆனால், தோலின் அடியில், லேயரில் கொழுப்பு தங்கியிருக்கும். கொழுப்பு ஒரே இடத்தில் தங்கியிருந்தால் அதை லைப்போமா (Lipoma) என்று சொல்வோம். மிருதுவாக இருக்கும். அழுத்தினாலும் வலி இருக்காது. தொட்டுப் பார்த்தால், நகரும். இதனால் எந்த பாதிப்பும் இல்லை. எனவே, பயப்படத் தேவை இல்லை. சிலருக்கு, திடீரென்று கை, கால்களில், கொழுப்புத் திசுக்கட்டிகள் உருவாகலாம். வலி அதிகம் இருந்து, நரம்பு பாதிக்கப்பட்டால், சிகிச்சை மேற்கொள்ளலாம்.
கட்டிகள் வெளியில் தெரிந்து பார்க்க அசிங்கமாக இருக்கிறது என்றால், கொழுப்பை உறிஞ்சி எடுக்கும் லைப்போசக்ஷன் சிகிச்சை செய்துகொள்ளலாம். இந்த சிகிச்சை எடுத்தாலும், மீண்டும் கட்டி வர வாய்ப்பு உள்ளது.
நரம்பு மூலமாக உருவாகி, தோலில் தெரியக்கூடிய இன்னொரு கட்டி நியூரல் ஃபைரோலிபோமா (Neural Fibrolipoma). நரம்பிலிருந்து கட்டி ஏற்படும். இந்த கட்டியைத் தொட்டுப்பார்த்தால் கடினமாக இருக்கும். அப்படியே விட்டுவிடலாம். எந்தவிதச் சிகிச்சையும் தேவைப்படாது. ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு பிறகு, தானாகவே வளர்ச்சி நின்றுவிடும். ஆனால், மறையாது.
வியர்வைக் கட்டிகள்
கோடைகாலத்தில் அதிக அளவு வியர்வையும் புழுக்கமும் உடலில் சோர்வையும் அரிப்பையும் ஏற்படுத்திவிடும். வியர்வை அதிகமாக வெளியேறும்போது, உப்புச்சத்துக்களும் வெளியேறும். இது தோலின் மீது படிந்து, அரிப்பை ஏற்படுத்தும். வெளியே சென்று வந்ததும், நன்றாகக் குளித்துவிட்டால் பிரச்னை இல்லை. இந்த உப்புப் படிமம் தோலில் அடைப்பு ஏற்படுத்தினால், வியர்வை வெளியேறுவது தடைபடும். இதனால், சருமத்தில் கிருமித்தொற்று ஏற்பட்டு, வியர்வைக் கட்டிகளும் உருவாகும்.
வியர்வைக் கட்டிகள் ஏற்பட்டால், ஆன்டிபயாடிக் எடுத்துக்கொண்டாலே போதும். சிலருக்கு இந்த கட்டியில் அரிப்பு ஏற்பட்டு புண்ணாக மாறி, சீழ் கோர்த்துக்கொள்ளும். அவர்களுக்கு, சிறிய அறுவைசிகிச்சை செய்தால் போதும். உடல் பருமனாக உள்ளவர்களுக்கும் குழந்தைகளுக்கும் வியர்வைக் கட்டி ஏற்பட வாய்ப்பு அதிகம்.
வெப்பக் கட்டி
வெயில் காலத்தில் உடலிலிருந்து நீர் அதிகம் வெளியேறும். இதனால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும். உடல் வெப்பம் அதிகரித்து, கட்டிகளாகச் சருமத்தில் வெளிபடும். இந்தத் தருணத்தில் சரியாகப் பசி எடுக்காது. நீர்க் காய்கறிகள், குளிர்ச்சியான பழங்கள், நீர்மோர், இளநீர் சாப்பிடுதல், தினமும் நன்றாக தலைக்குக் குளிப்பதன் மூலம் உடல் உஷ்ணத்தைத் தவிர்க்கலாம். நிறையத் தண்ணீர் குடிக்க வேண்டும். வயதானவர்களுக்கு உஷ்ணக் கட்டி வர அதிகம் வாய்ப்பு உண்டு.
கட்டிகள் தவிர்க்க
சுத்தமாக இருந்தாலே, பெரும்பாலான கட்டிகளைத் தவிர்க்கலாம்.
கட்டி தானாக உடைத்துவிட்டால், தொடர்ந்து வெந்நீர் ஒத்தடம் கொடுத்து, அழுக்குகளை முழுமையாக வெளியேற்றலாம்.
கட்டியை அழுத்துவது, கீறுவது என சுயமருத்துவம் கூடாது. இதுவே, பாதிப்பை அதிகப்படுத்தலாம்.
பருத்தி ஆடைகளை அணிவதன் மூலம் வியர்வைக்கட்டியைத் தவிர்க்கலாம். தினமும் காலை, இரவு இரண்டு வேளை குளித்து உடலை பராமரிப்பதன் மூலம் கட்டிகளைத் தவிர்க்கலாம்.
நீர்க்காய்கறிகள், பழங்களை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். இளநீர், மோர், பழச்சாறுகள் உடலைக் குளிர்ச்சியாக்கும்.