[carousel ids=”68686,68687,68688,68689,68690,68691″]
எல்லோருக்கும் குரல் கொடுத்த, எல்லோரது குரலையும் மதித்த காமராஜர்தான் எனது குருநாதர் என ராகுல்காந்தி நேற்று கொட்டும் மழையில் திருச்சியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசினார்.
நாடு முழுவதும் பல மாநிலங்களுக்கு சுற்றுப்பயணம் செய்து, பொதுமக்களளயும் விவசாயிகளையும் சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டு வருவதோடு மோடி அரசையும் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி. இந்நிலையில் நேற்று திருச்சியில் நேற்று நடைபெற்ற பிரமாண்ட கூட்டத்தில் பேசியதோடு, தமிழக விவசாயிகளை சந்தித்து கலந்துரையாடினர்.
திருச்சி, பொன்மலை ஜி கார்னர் மைதானத்தில் நேற்று ராகுல் காந்தி பேச ஆரம்பித்தபோது பயங்கரமாக மழை பெய்தது. கொட்டும் மழையில் நனைந்தபடியே தமிழில் ‘வணக்கம்’ எனக் கூறி தனது பேச்சை ஆரம்பித்தார். மேலும் அவர் பேசியதாவது:
”தமிழக மக்களிடம் உரையாற்றுவது மகிழ்ச்சியளிக்கிறது. காமராஜரால் முதல் முறையாக பள்ளிக்கு செல்லும் வாய்ப்பு பலருக்கு கிடைத்தது. ஏராளமானோர் நல்ல வேலை வாய்ப்பு கிடைத்து, சிறப்பாக வாழ வழிவகுத்தவர் காமராஜர். எனது குருநாதர் காமராஜர்தான். அவர் எல்லோருக்கும் குரல் கொடுத்தார். எல்லோருடைய குரலையும் மதித்தார். இன்று ஆட்சியில் இருப்பவர்கள் மக்களின் எண்ணங்களுக்கு மதிப்பளிப்பதில்லை. பிரதமராக, முதல்வராக மக்கள் விருப்பம் அறியாது ஆட்சி நடத்த முடியும் என நினைக்கிறார்கள்.
தமிழகத்தில் மிக முக்கியமான பிரச்னையாக வேலையில்லாத் திண்டாட்டம் உள்ளது. இங்கு மூன்றில் ஒருவருக்கு வேலையில்லை. அதேபோல், தமிழக அரசு இளைஞர்களின் குரலை கேட்பதில்லை.
தமிழக அரசின் மதுக்கொள்கையால் குடும்பங்கள் சீரழிந்து வருகிறது. மது விற்பனையாளர்களுக்கு மட்டுமே தமிழக அரசு செவிசாய்க்கிறது. ஆனால், இளைஞர்களின் குரலை கேட்பதில்லை. தமிழகத்தில் சென்ற ஆண்டு மட்டும் மது விற்பனை மூலம் ரூ. 30 ஆயிரம் கோடி வருமானம் அரசுக்கு கிடைத்துள்ளது. குடிப்பவர்கள் ஆண்டுக்கு தலா ரூ.10 ஆயிரத்தை அரசு மற்றும் மது நிறுவனங்களுக்கு தருகிறார்கள். தமிழக பெண்களின் வலியை, கஷ்டத்தை நான் உணர்ந்துள்ளேன். மதுவால் சீரழியில் குடும்பங்களின் கஷ்டத்தை தீர்ப்போம். தமிழகத்தில் மக்கள் நலனுக்காக புதிய மதுக்கொள்கையை கொண்டு வருவோம்”
இவ்வாறு ராகுல்காந்தி பேசினார்.