அரசுக்கு எதிரான போராட்டத்தை கட்டுப்படுத்த டுவிட்டருக்கு தடை விதித்த துருக்கி அரசு
துருக்கி நாட்டில் அடிக்கடி ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தினர்கள் தாக்குதல் நடத்துவதால் அந்நாட்டு மக்கள் துருக்கி அரசு மீது கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். துருக்கி அரசு சரியான நடவடிக்கை எடுக்காததால்தான் ஐ.எஸ்.ஐ.எஸ் தாக்குதல் நீட்டித்து வருவதாக மக்கள் போராட தொடங்கியுள்ளனர். இந்த போராட்டத்திற்கு டுவிட்டர் மூலம் பொதுமக்கள் ஒருவருக்கொருவர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இதனால் துருக்கி அரசு டுவிட்டரை தடை செய்ய முடிவு செய்துள்ளது..
கடந்த திங்கட்கிழமை துருக்கியில் உள்ள சுருக் நகரில் நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதலில் 32 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த குண்டுவெடிப்பு காட்சிகள் டுவிட்டர் இணையதளம் வாயிலாக பொதுமக்களிடையே மிக வேகமாக பரவ தொடங்கின. துருக்கி ஆளும் அரசை கண்டித்து போராட்டம் நடத்தவும் டுவிட்டர் வாயிலாக அழைப்பு விடப்பட்டது. பல இடங்களில் அரசுக்கு எதிராக போராட்டங்கள் மற்றும் வன்முறைகள்வெடித்தன.
இதை அடுத்து போராட்டம் பரவாமல் தடுக்க டுவிட்டர் இணையதளத்துக்கு துருக்கி அரசு தற்காலிக தடை விதித்துள்ளது. முக்கிய நகரங்களில் போராட்டம் நடத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த ஆண்டு துவக்கத்தில் இஸ்தான்புல் நீதிமன்றத்துக்குள் தீவிரவாதிகள் புகுந்து பலரை பிணைக்கைதிகளாக சிறைபிடித்த சமயத்தில் துருக்கி அரசு டுவிட்டர், யூடியூப் போன்ற வலைதளங்களுக்கு தடை விதித்தது என்பது குறிப்பிடத்தக்கது