இன்று கருட ஜெயந்தி

10garudan_with_siverkavasam_newvastharam

திருமாலின் வாகனமான கருடன் என்கின்ற பட்சிராஜன், ஆடி சுவாதியில் அவதரித்தவர். நித்ய சூரிகளுள் அனந்த கருட,  விஸ்வக்÷க்ஷனர் ஆகிய மூவரில் கருடனும் இடம் வகிக்கிறார். கருட பகவானை அனைத்து திருமால் திருத்தலங்களிலும் தரிசிக்கலாம்.  எனினும் நாச்சியார்கோவில் கல் கருடன், திருவரங்கம், திருவெள்ளியங்குடி ஆகிய தலங்களில் சங்கு, சக்கரம் தாங்கிய சதுர்புஜ கருடன்  போன்றவர்கள் அதிமுக்கியமான கருடன்களில் சிலர். அதேபோல் ஆழ்வார்திருநகரியில் ஆதிநாதன் திருக்கோயில் மதில்மீது  காட்சியளிக்கும் கருட பகவானும் மிக விசேஷமானவர். இவரை அருள்பட்சி ராஜர் என்று அழைக்கின்றனர். அந்நியர்களின் அதிகாரம்  மேலோங்கியிருந்த காலத்தில், இந்துக் கோயில்களுக்கு பாதுகாப்பின்மை இருந்தது. அதனால் பக்தர்கள் சிலா மற்றும் பஞ்சலோகத்  திருவுருவங்களை, பாதுகாப்பு காரணமாக இடமாற்றம் செய்து காப்பாற்றி வந்தனர். அதே போன்று ஆழ்வார் திருநகரியிலுள்ள  நம்மாழ்வாரின் திருவுருவையும் கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியில் வைத்திருந்தார்கள். நிலைமை சீரானவுடன் ஆழ்வார்  திருவுருவத்தைத் தேடிச் சென்றவர்களுக்கு எந்த இடத்தில் உருவம் வைக்கப்பட்டுள்ளது என்பதைக் கண்டறிய முடியாமல் போயிற்று.

அவர்கள் நீலகண்ட கசம் என்ற குளம் அமைந்திருந்த பகுதி அருகே இருந்தபோது, வானில் ஓர் கருடன் வட்டமிட்டுக் கொண்டிருப்பதைக்  கண்டு இந்தப் பகுதியில்தான் ஆழ்வாரின் திருவுருவம் இருக்கலாம் என்று தேடுதல் வேட்டையைத் தீவிரப்படுத்தினார்கள். தேடலில்  ஆழ்வாரின் உருவம் கண்டு மகிழ்ந்து வந்தவர்களில் ஆழ்வார் தோழப்பர் என்பாரும் ஓர் குறவனும் அடங்குவர். நம்மாழ்வாரின்  திருவுருவைக் கண்டு அதை எடுத்துச் செல்ல முயற்சிக்கும்போது, தோழப்பர் என்பார் கால் தடுக்கி குளத்திலே விழுந்து உயிர்விட,  குறவன் மட்டும் பல சிரமங்களைத் தாண்டி அழகர் கோயில் முதலான தலங்களைத் தாண்டி ஆழ்வார்திருநகரிக்கு நம்மாழ்வாரின்  திருமேனியைக் கொண்டுவந்து சேர்த்தார். இது காரணமாகத்தான் குறவனின் ஆழ்வான் மீதான பற்றுதலைப் பாராட்டும் பொருட்டு,  ஆழ்வாருக்குத் திருமஞ்சனம் (அபிஷேகம்) ஆனவுடன் குறவன் கொண்டை அலங்கரிப்படுவது இன்றும் வழக்கத்தில் உள்ளது. கருட  பகவானை வேத வடிவானவன் என்று போற்றுகிறது சாஸ்திரங்கள். நம்மாழ்வாரோ நான்கு வேதங்களையும் தமிழ்ப் பாடல்களாக்கி,  வேதம் தமிழ் செய்த மாறன் என்ற பெருமையைப் பெற்றார். எனவே, நம்மாழ்வாரின் இருப்பிடத்தை கருடன் காட்டிக் கொடுத்ததில்  வியப்பேதுமில்லை. ஆழ்வார்திருநகரியில் மதில்மேல் அமைந்துள்ள கருடனுக்கு சிறப்பு ஆராதனைகள் நித்தமும் உண்டு. இவரை மதில்  கருடன் என்றே போற்றுவர். இவர் பலரின் குலதெய்வமாக விளங்கி வருவதுடன், பிரார்த்தனா மூர்த்தியாகவும் விளங்குகிறார். பக்தர்கள்  இவருக்கு தேங்காய் மடல் விடுவார்கள் (சூரைத் தேங்காய் போல்).

இந்த கருடனுக்கு பிரதி வருடமும் 10 நாட்கள் சிறப்பு விழா கொண்டாடப்படுகிறது. ஆடித் திருவாதிரை அன்று இவரின் திருவிழா  ஆரம்பமாகி, ஆடி சுவாதி (அவதார தினம்) வரை நடைபெறும். 10 நாட்களிலும் கருடனுக்கு, விசேஷ திருமஞ்சனம் ! இந்நாட்களில்  அவருக்கு மிகப் பிரியமான அமிர்தகலசம் என்ற தின்பண்ட நைவேத்தியமும் (அமிர்த கலசம் என்பது பூரண கொழுக்கட்டை போன்றது),  நம்மாழ்வாரின் பாசுரங்கள் ஓதலும் சிறப்பாக நடக்கிறது. இந்தக் கருடனுக்கு ஏற்கெனவே குறிப்பிட்டது போல், தேங்காய் விடல்  ஸமர்ப்பணை இங்கு முக்கியப் பிரார்த்தனையாக விளங்குகிறது. ஆடி சுவாதியன்று மட்டும் ஆயிரக்கணக்கான தேங்காய் விடல்  கொடுப்பார்கள். பெரும்பாலான பக்தர்கள் இவரைக் குலதெய்வமாகக் கொண்டாடி, இந்த வைபவங்களில் அதிக அளவில் கலந்து  கொள்கிறார்கள். இந்தக் கருடனை வழிபட்டு இவருக்கு காணிக்கையாக தேங்காய் விடல், பால் குடம் எடுத்தல் மற்றும் விஷப்பூச்சிகளின்  உருவங்களை காணிக்கையாகச் சமர்ப்பிக்கிறார்கள். ஆடி சுவாதியில் கருடனுக்கு சாய பரிவட்டம் சமர்ப்பிக்கிறார்கள். பெரிய  வஸ்திரத்தில் பாம்பு, தேள், பூரான் போன்ற பூச்சிகள் வரையப்பட்ட வஸ்திரமே சாய பரிவட்டமாகும். இந்த கருடன், கோயிலின்  மதில்மேல் வடதிசையில் அமைந்துள்ளார். இவருக்கருகே கலை வேலைப்பாடுகள் நிறைந்த கல்லாலான இரண்டு தீப ஸ்தம்பங்கள்  பித்தளைக் கவசத்துடன் அமைந்துள்ளது. இதில் ஒன்றில் நெய்யும், மற்றதில் எண்ணெயும் சேர்த்து தீபம் ஏற்றுவர். மதில்மேல் சென்று  தரிசிக்க படிக்கட்டுகள் உள்ளன. விஷப்பூச்சிகளினால் ஏற்படும் தீமைகளை கருட வழிபடானது அகற்றும். மேலும், தொலைந்துபோன  பொருட்களும் கிடைக்கும். ஆழ்வார்கள் பலரும் கருடனைப் போற்றியுள்ளனர். ஸ்வாமி தேசிகனும் சிறந்த கருட உபாஸகர். இவருக்கு  ஹயக்ரீவரின் அருளும் கருட பகவானால்தான் கிடைத்தது.

Leave a Reply