ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்ட வழக்கில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டு வாழ்நாள் தடை விதிக்கப்பட்ட இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர் ஸ்ரீசாந்த், உள்பட 36 பேர் மீதான குற்றச்சாட்டுகளில் ஆதாரம் இல்லை என்று கூறி அவர்கள் அனைவரும் நிரபராதிகள் என்று கூறி டெல்லி நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது.
6வது ஐபிஎல் போட்டியில், லஞ்சம் பெற்றுக் கொண்டு ஆட்டத்தின் போக்கை திசைதிருப்பியதாக எழுந்த குற்றச்சாட்டுக்காக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியைச் சேர்ந்த ஸ்ரீசாந்த், அஜித் சாண்டிலா மற்றும் அங்கீத் சவாண் ஆகியோர் கடந்த மே 16ஆம் தேதி கைது செய்யப்பட்டனர். மேலும், 11 சூதாட்டத் தரகர்களும் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து ஸ்ரீசாந்த், அஜித் சாண்டிலா மற்றும் அங்கீத் சவாண் ஆகியோருக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் வாழ்நாள் தடை விதித்தது.
இது குறித்த வழக்கு டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் கடந்த சில மாதங்களாக நடந்து வந்த நிலையில் நேற்று இந்த வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டது. இந்த தீர்ப்பில் கிரிக்கெட் வீரர்கள் ஸ்ரீசாந்த், அஜித் சாண்டிலா மற்றும் அங்கீத் சவாண் உள்பட 36 பேரை விடுதலை செய்து பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது. குற்றச்சாட்டுகளை காவல்துறையால் நிரூபிக்க முடியவில்லை என்று கூறிய நீதிமன்றம், 36 பேர் மீதான குற்றச்சாட்டுகளை தள்ளுபடி செய்துள்ளது.
இந்த தீர்ப்பு குறித்து விடுதலையான கிரிக்கெட் வீரர்கள் கருத்து தெரிவித்த கருத்துக்கள் இதோ:
ஸ்ரீசாந்த்
ஸ்ரீசாந்த் கூறுகையில், ”என் மீதான குற்றச்சாட்டு தள்ளுபடி செய்யப்பட்டிருப்பதால், கிரிக்கெட் பயிற்சியை மீண்டும் தொடங்க விருப்பமாக இருக்கிறேன். அதற்கு பி.சி.சி.ஐ அனுமதி அளிக்கும் என்றும் நம்புகிறேன்” என்றார்.\
அஜித் சண்டிலா
இந்நிலையில் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு குறித்து அஜித் சண்டிலா கூறுகையில், ”ஐ.பி.எல் சூதாட்ட வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டது மகிழ்ச்சியளிக்கிறது. என் மீது சூதாட்ட வழக்கு தொடரப்பட்டது மோசமான கனவு” என்றார்.
அங்கீத் சவான்
அங்கீத் சவாண், ”ஐ.பி.எல் வழக்கில் உச்ச நீதிமன்ற உத்தரவால் ஏற்கனவே இருந்த பதற்றமும், அதிருப்தியும் முடிவுக்கு வந்திருக்கிறது. மீண்டும் கிரிக்கெட் விளையாடத் தொடங்குவேன்” என்றார்.