தான்றிக்காயை, Terminalia bellarica என்று குறிப்பிடுவோம். இதைக் கர்ஷம், அக்ஷம் என்று குறிப்பிடுவார்கள். இது மஹாவிருக்ஷம் ஆகும். எல்லா இருமலுக்கும், சளிக்கும் இதை முகதாரணம் செய்வதற்குச் சிறந்தது. கபப் பித்தத்தை இது தணிக்கும். சிறிது உஷ்ண வீர்யம் உடையது. இருமலை மாற்றும், கண்ணுக்குச் சிறந்தது. இதிலிருந்து எடுக்கும் எண்ணெய்க் கூந்தல் வளர்வதற்கு உதவுகிறது. கண்ட ரோகங்களை மாற்றுவது, தொண்டை கரகரப்புக்குச் சிறந்தது. வெல்லத்துடன் சேர்த்துச் சாப்பிட வாதத்தைத் தணிக்கும்.
தான்றி மரம் பிரம்மாண்டமான தோற்றம் கொண்டது. 120 அடி வரைகூட வளரும். தண்டின் அடிப் பகுதியின் சுற்றளவு 10 அடிவரை இருக்கக்கூடும். இதன் இலைகள் கால்நடைகளுக்குத் தீவனமாகப் பயன்படும். குறிப்பாகக் கறவை மாடுகளின் பால் பெருக்கத்துக்கு, இது சிறந்த தீவனம்.
வட மொழியில் தான்றியை ‘விபீதகி’ என்பார்கள். தினந்தோறும் தான்றி உண்டால், நோய் நீங்கும் என்பது இதன் அர்த்தம். இதைக் கொட்டை நீக்கிக் கருகாமல் வறுத்துப் பொடித்து 1 கிராம் அளவு சர்க்கரை கலந்து காலை, மாலை கொடுக்க மலச்சிக்கல், குடல் பலமின்மை, காய்ச்சல், பித்தத் தலைவலி, ரத்தமூலம், சீதபேதி ஆகியவை தீரும்.
தான்றிப் பொடி 3 கிராமுடன் சமஅளவு சர்க்கரை வெந்நீரில் கலந்து காலை, மாலை சாப்பிடப் பித்த நோய்கள், வாய் நீர் ஒழுகல் தீர்ந்து தெளிவுறும். இதன் காயை நீர்விட்டு இழைத்துப் புண்களில் பூச ஆறும். அக்கியில் பூச எரிச்சல் தணிந்து குணமாகும்.
தான்றிக்காயின் தோலை வறுத்துப் பொடித்துத் தேனுடனோ சர்க்கரையுடனோ காலை மற்றும் மாலை சாப்பிட ரத்த மூலம் நிற்கும். தான்றிக்காய் தோலைச் சேகரித்துச் சூரணம் செய்துகொள்ளவும். இதில் அரை தேக்கரண்டி அளவு தேனில் கலந்து தினசரிச் சாப்பிட்டு வர அம்மை நோய்கள் தீரும்.
தான்றிக்காயைச் சுட்டு மேல்தோலைப் பொடித்து, அதன் எடைக்குச் சமமாய்ச் சர்க்கரை கலந்து தினசரிக் காலையில் வெந்நீருடன் சாப்பிட்டுவரப் பல்வலி, ஈறு நோய்கள் போன்றவை குணமாகும்.
தான்றிக்காய் தோல், திப்பிலி, அதிமதுரம் ஆகியவற்றை வகைக்கு 100 கிராம் எடுத்துத் தூள் செய்துகொள்ளவும். இதில் 10 கிராம் அளவு எடுத்து அரை லிட்டர் தண்ணீரில் கொதிக்க வைத்து, நான்கில் ஒரு பாகமாய்ச் சுண்ட வைத்த கஷாயத்தை வடிகட்டி காலை, மாலை இரண்டு வேளையும் 100 மி.லி. அளவில் குடித்துவர ஆஸ்துமா, மூச்சிளைப்பு, மூச்சுத்திணறல், படபடப்பு ஆகியவை எளிதில் குணமாகும்.
தான்றிக்காய், நெல்லிக்காய் வகைக்கு 100 கிராம், கீழாநெல்லி, கரிசலாங்கண்ணி, குப்பைமேனி வகைக்கு 50 கிராம், சுக்கு, மிளகு, திப்பிலி, சீரகம் வகைக்கு 25 கிராம், அன்னபேதி செந்தூரம் 10 கிராம்- இவை அனைத்தையும் ஒன்றாய்க் கலந்து தூள் செய்து ஒரு தேக்கரண்டி பொடியைத் தேனில் குழைத்துக் காலை, மாலை சாப்பிட்டுவர ரத்தம் பெருகும், ரத்தச் சோகை விலகும்.