டெல்லியில் அப்துல்கலாம் உடல். ராமேஸ்வரம் கொண்டு வரப்படுவது எப்போது?
நேற்று மேகாலய மாநிலத்தில் காலமான முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் அவர்களின் உடல், பொதுமக்களின் அஞ்சலிக்காக இன்று டெல்லிக்கு கொண்டு வரப்படுகிறது. அவருக்கு இன்று குடியரசு தலைவர், பிரதமர் உள்பட அமைச்சர் பெருமக்கள் அஞ்சலி செலுத்தவுள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம், நேற்று இரவு மாரடைப்பால் திடீரென மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு பிரதமர், ஜனாதிபதி, அனைத்து மாநில முதலமைச்சர்கள் உள்பட தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், அப்துல்கலாமின் உயிர் பிரிந்த ஷில்லாங் பெத்தானியா மருத்துவமனையில் இருந்து அவரது உடல் டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனைக்கு இன்று கொண்டு வரப்பட்டு, பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படும் என்று பாதுகாப்புத் துறை செய்தித் தொடர்பாளர் அமித் மகாஜன் செய்தியாளர்களிடையே அறிவித்துள்ளார்.
ஷில்லாங்கில் இருந்து அசாம் மாநிலம் கவுகாத்திக்கு கலாமின் உடல் ஹெலிகாப்டர் மூலமாக எடுத்து வரப்பட்டுள்ளது. அங்கிருந்து டெல்லிக்கு சிறப்பு விமானம் மூலமாக கொண்டு செல்லப்படும் அப்துல் கலாமின் உடலை, டெல்லி விமான நிலையத்தில் பிரதமர் நரேந்திர மோடி பெற்றுக்கொள்கிறார்.
டெல்லியில் தலைவர்கள் அஞ்சலி செலுத்திய பின்னர் அப்துல் கலாமின் சொந்த ஊரான ராமேஸ்வரத்தில் நல்லடக்கம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.