அமரரான அணு விஞ்ஞானிக்கு தலைவர்கள் இரங்கல் அறிக்கை

tn leadersமறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் மறைவுக்கு தமிழக கவர்னர் கே.ரோசய்யா, முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

ஆளுநர் ரோசய்யா…

தமிழக ஆளுநர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ”முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் திடீர் மறைவு எனக்கு மிகுந்த அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. மக்களின் ஜனாதிபதியாக விளங்கிய அவர், வளர்ச்சியையும், உத்வேகத்தையும் நோக்கி இளைஞர் சமுதாயத்தை செல்ல வைத்தவர். இந்த நாடு ஒரு சிறந்த மனிதர், தலைவர், தலைசிறந்த விஞ்ஞானி, எளிமையும், பண்பும் மிகுந்த ஒரு நல்லவரை இழந்துவிட்டது.

சென்னையில் உள்ள கவர்னர் மாளிகைக்கு அவர் அடிக்கடி வருகை தந்துள்ளார். அவரை நான் வரவேற்றும் உள்ளேன். அவரது சிறந்த பண்பும், அன்பும் அவருடன் என்னை மிகவும் நெருக்கமாக ஆக்கியது. அவரது மறைவு தமிழ்நாடு, இந்தியாவுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த இளைஞர் மற்றும் மாணவ சமுதாயத்துக்கு ஏற்பட்ட மிகப்பெரிய இழப்பு. அவரது மறைவுக்கு எனது இரங்கலை தெரிவித்துக் கொள்வதுடன், அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறேன்” என்று கூறி உள்ளார்.

முதல்வர் ஜெயலலிதா…

அப்துல்கலாம் மறைவுக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ”தமிழக மண்ணின் அன்புக்குரிய தலைமகனும், பாரதரத்னா விருது பெற்றவரும், அனைவராலும் ஈர்க்கப்பட்ட மிகச்சிறந்த விஞ்ஞானியும், நாட்டின் 11வது குடியரசுத் தலைவராகவும் விளங்கிய ஏ.பி.ஜெ.அப்துல் கலாம், திடீரென மறைந்து விட்டார் என்ற செய்தியை அறிந்து மிகுந்த வேதனையும், துயரமும் அடைந்தேன்.

சுதந்திர இந்தியாவில் மக்களால் கவரப்பட்ட நபர்களில் மிகச்சிறந்தவராக கலாம் விளங்கினார். ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் மிக மிக சாதாரணமான பின்னணியுடன், ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர் அவர். தனது விடாமுயற்சி, கடினமான உழைப்பு, சிறந்த அறிவாற்றல் ஆகியவற்றின் மூலம் மிகப்பெரிய உயரத்தை அடைந்தார்.

இந்திய விண்வெளித் துறையிலும், அணு ஆயுதம், அணுசக்தித் திட்டங்களுக்கு அவரது அளப்பரிய பணி அனைவரும் அறிந்ததாகும். மிகவும் தொலைநோக்குப் பார்வை கொண்ட விஞ்ஞானியாக விளங்கிய அப்துல் கலாம், விண்வெளி தொழில்நுட்பத்திலும், அதுதொடர்பான ஆய்வுத் துறையிலும் இந்தியாவை உலக அரங்கில் பெருமை கொள்ளத்தக்க இடத்துக்கு எடுத்துச் சென்ற பெருமைக்குரியவர்.

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தில், செயற்கைக்கோளை தாங்கிச் செல்லும் ராக்கெட்டுகளை மேம்படுத்தும் குழுவின் தலைவராக விளங்கினார். இந்திய ராணுவ ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பின் சார்பில் ஒருங்கிணைந்த ஏவுகணை மேம்பாட்டுத் திட்டத்துக்கும் தலைமை வகித்து பணியாற்றியவர். இந்திய மக்களுக்கு குறிப்பாக குழந்தைகளுக்கும், மாணவ-மாணவிகளுக்கும் மிகச் சிறந்த வழிகாட்டியாக விளங்கியவர் கலாம்.

இந்தியாவில் உள்ள அனைத்து மக்களுக்கும், மிகக் குறிப்பாக இளைஞர்களுக்காக தொடர்ந்து பேசியும், எழுதியும் வந்துள்ளார். இளைஞர்களின் மிகப்பெரிய ஆதர்ச நாயகனாகவும், இலட்சினையாகவும் விளங்கியவர். தனது எளிமையாலும், கருணையாலும் அனைவரையும் ஈர்த்தவர். மிகச்சிறப்பான தேச பற்றுக் கொண்டவராக விளங்கினார். அனைத்துக்கும் மேலாக நாட்டின் நலனில் அக்கறை செலுத்தியவர்.

தொழில்நுட்பத்தை அணிதிரண்டி அதன்மூலம், ஏழை-எளிய மக்களுக்கு எத்தகைய நன்மைகளை அளிக்க முடியும் என்ற சிந்தனையையே தனது வாழ்நாள் முழுவதும் கொண்டிருந்தார். அவரது மறைவுக்கு இந்திய, தமிழக மக்களுடன் இணைந்து நானும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

பொன்.ராதாகிருஷ்ணன்…

அப்துல் கலாம் மறைவுக்கு, மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ”முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் அவர்கள் திடீர் மறைவு எய்திய செய்தி அறிந்து பெரிதும் அதிர்ச்சி அடைந்தேன். தமிழ் மண்ணில் ஓர் எளிய குடும்பத்தில் பிறந்து, ஏழ்மையில் வளர்ந்து, சோதனைகள் பல கடந்து மிகச்சிறந்த கல்விமானாக முன்னேறி வந்தவர்.

கல்லூரி பேராசியராக தன வாழ்வை தொடங்கி, இந்திய நாட்டின் விஞ்ஞான வளர்ச்சிக்கு பெரும்பங்காற்றி சாதனைகள் பல புரிந்தவர். இந்திய விண்வெளி ஆராய்ச்சி தலைமை விஞ்ஞானியாய்பொறுப்பேற்று, அத்துறையில் மகத்தான  வரலாற்றை படைத்து இந்திய நாட்டின் புகழை உலக அரங்கின் உச்சிக்கே கொண்டு சென்றவர். எஸ்.எல்.வி. 3 ராக்கெட்டை பயன்படுத்தி ரோகினி 1 என்ற ஏவுகணை துணைக்கோளை வெற்றிகரமாக செலுத்தியதும், 1998 ஆம் ஆண்டு மே மாதம் 11 மற்றும் 13 ஆம் தேதிகளில் வெற்றி கண்ட போக்ஹ்ரான் அணு ஆயுத சோதனையில் முக்கியபொறுப்பேற்று பணியாற்றி இந்தியாவை அணு ஆயுத வல்லரசாக உலகில் தலை நிமிர வைத்த அவரது சாதனை அனைத்தும் எதிர்கால வரலாறு போற்றும்.

அரசியலில் இணையாமல் விஞ்ஞான உலகையே சுற்றி வந்த அவர், அனைத்து அரசியல் கட்சிகளின் ஒருமித்த ஆதரவோடு இந்திய குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பதே அவரது அறிவு, நேர்மை, உழைப்பு மற்றும் நாட்டுப்பற்று ஆகியவற்றிற்கு சிறந்த எடுத்துகாட்டாகும். தனது இறுதி நாள் வரை மிக எளிமையாக வாழ்ந்த அவர், கனவு காணுங்கள் என்ற அற்புதகருத்தோவியத்தை படைத்து இளைஞர்களின் எதிர்கால வாழ்விற்கு ஒளி விளக்காய் திகழ்ந்தவர்.அவரது இழப்பு இந்திய நாட்டிற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.

அவரை இழந்து துயருறும் அவரது குடும்பத்தினர், விஞ்ஞான அறிஞர்கள், கல்வியாளர்கள் மற்றும் அனைத்து மக்களின் துயரிலும் நான் பங்கேற்கிறேன். அவரது ஆன்ம சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்” என்று கூறி உள்ளார்.

மு.க.ஸ்டாலின்…

தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் தனது இரங்கல் செய்தியில், ”நேர்மை, எளிமை, அறிவுகூர்மை மிகுந்த இணையற்ற மனிதராக திகழ்ந்தவர் டாக்டர் அப்துல்கலாம். ஒரு தலைசிறந்த ஏவுகணை விஞ்ஞானி. இந்திய விண்வெளித்திட்டத்தில் அவரது பங்களிப்பு அனைவரையும் பிரமிக்க வைத்தது. அவரது திறமையைப் பார்த்த உலக நாடுகள் இந்தியாவின் மீது மரியாதை செலுத்தியது. அது மட்டுமின்றி உலக நாடுகள் எல்லாம் நம்மை திரும்பிப் பார்க்க வைத்தவர் டாக்டர் அப்துல் கலாம். ஏவுகணை மற்றும் பாதுகாப்பு திட்டங்களில் அவர் ஆற்றிய பங்கு அதைவிட முக்கியமானது. தொழில்நுட்பத்தில் அவர் நிகழ்த்திய சாதனைகளால் உலகில் மிகவும் முன்னேறிவிட்ட ராணுவத்திற்கு இணையாக நம் ராணுவத்தை உயர்த்தியது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

அவர் ஆற்றிய ஆர்வமூட்டும் உரைகள் சின்னஞ்சிறு பள்ளிக் குழந்தைகளையும், இளைஞர்களையும் தங்களுக்காகவும், தங்கள் நாட்டிற்காகவும் கனவு காண வைத்தது. “எதையும் சாதிக்கும் திறமை இந்தியாவிற்கு இருக்கிறது” என்பதை உலக நாடுகளுக்கு உணர்த்தி, நம் நாட்டிற்கு உலக அரங்கில் மரியாதையும், பெருமையையும் தேடித் தந்தவர். ராமேஸ்வரத்தில் பிறந்து, கனவுகளுடன் வளர்ந்து இந்தியாவின் குடியரசுத் தலைவரான எளிமையான சிறந்த மனிதர் டாக்டர் அப்துல் கலாம் அவர்களின் பெருமைகளை நம் நாடு நினைவில் வைத்திருப்பதோடு, அவருக்கு என்றும் நன்றிக் கடன்பட்டிருக்கும்.

டாக்டர் கலாம் அவர்கள் தான் மட்டும் கனவு காணாமல் இந்த நாட்டின் இளைய தலைமுறையையும் “கனவு காணுங்கள். சாதிக்க முடியாதது எதுவும் இல்லை” என்று உணர்வுகளை தட்டி எழுப்பியிருக்கிறார். இன்றைய தினம் அவர் நம்மிடம் இல்லை. அவரது மறைவு நமக்கு எல்லாம் பேரிழப்பு. எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்ளும் அதே நேரத்தில் இந்தியாவை தொழில்நுட்ப ரீதியாக முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல வேண்டும் என்று பாடுபட்ட டாக்டர் அப்துல் கலாம் அவர்களின் கனவுகளை நிச்சயம் நிறைவேற்றி, அனைத்து தரப்பு மக்களையும் உள்ளடக்கிய வளர்ச்சியைக் காண்போம் என்று இந்த நேரத்தில் உறுதியேற்றுக் கொள்வோம்” என்று கூறி உள்ளார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த்:

முன்னாள் குடியரசுத்தலைவர் டாக்டர்.ஏ.பி.ஜெ.அப்துல்கலாம் அவர்கள் தமிழர்களுக்கும், தமிழகத்திற்கும் கிடைத்த மிகப்பெரிய பெருமை. அண்ணாரது இழப்பு, அவரது குடும்பத்தினருக்கு மட்டுமல்ல, இந்தியாவிற்கும், தமிழகத்திற்கும் பேரிழப்பாகும். அவரது இறுதிசடங்கு தமிழகத்திலேயே நடத்தவேண்டுமென்று தமிழக மக்களின் சார்பாக மத்திய, மாநில அரசுகளை கேட்டுக்கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.  

Leave a Reply