விண்வெளி ஆராய்ச்சி மையம் உள்ளிட்ட மிக முக்கிய அரசுத் துறைகளில் வேலைவாய்ப்பு பெற இளங்கலை மின்னணுவியல் (பி.எஸ்சி. எலக்ட்ரானிக்ஸ்) படிப்பு முக்கிய பங்காற்றுவதால் அண்மைக்காலமாக மாணவர்களிடம் இந்தப் படிப்பு மீதான ஆர்வம் அதிகரித்துள்ளது.
அந்த வகையில், தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் பி.எஸ்சி. எலக்ட்ரானிக்ஸ் பட்டப் படிப்புக்கு மாணவர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
ஆண்டுக்கு 40 மாணவர்கள் படிக்கக் கூடிய இந்தப் படிப்பைத் தேர்வு செய்ய பிளஸ் 2 வகுப்பில் கணிதத்துடன், அறிவியல் படித்திருக்க வேண்டும். மாநிலத்தில் குறிப்பிட்ட சில கல்லூரிகளில் மட்டுமே இந்த பட்டப் படிப்பு உள்ளது.
இளநிலை, முதுநிலை மின்னணுவியல் (எலக்ட்ரானிக்ஸ்) பட்டப் படிப்பு முடித்தால் விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ), பிஎஸ்என்எல், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்க வாய்ப்புள்ளது.
இதுதவிர, செல்பேசி, தொலைக்காட்சிப் பெட்டி போன்றவற்றை பழுதுநீக்கும் சேவை செய்து தனியாக வருவாய் ஈட்டி மேல்படிப்பைத் தொடரவும் வாய்ப்புள்ளது.
இந்தப் படிப்பு குறித்து, தருமபுரி அரசு கலைக் கல்லூரி முன்னாள் முதல்வரும், மண்டல இணை இயக்குநருமான பெ.கி.பாஸ்கரன் கூறுகையில், “”மாநிலத்தில் குறிப்பிட்ட சில கல்லூரிகளில் மட்டுமே உள்ள பி.எஸ்சி. எலக்ட்ரானிக்ஸ் பட்டப் படிப்பை முடித்தால் யாரையும் எதிர்பார்க்காமல் சுயமாக சம்பாதித்து மேல் படிப்பு படிக்க முடியும்” என்றார்