இன்ஸ்டாகிராமில் புத்தக விமர்சனம்

instagramஒளிப்படப் பகிர்வு சேவையான இன்ஸ்டாகிராமைப் பல விதங்களில் பயன்படுத்தலாம். அமெரிக்க வலைப்பதிவாளர் ஒருவர் இன்ஸ்டாகிராம் பயன்பாட்டை புதிய உச்சத்துக்குக் கொண்டு சென்றுள்ளார்.

யூலி பெய்ட்டர் கோஹன் எனும் அந்த வலைப்பதிவாளர் இன்ஸ்டாகிராம் மூலம் புத்தக விமர்சனங்களை வெளியிட்டு வியப்பையும் ஏற்படுத்திருக்கிறார். நல்ல வரவேற்பையும் பெற்றிருக்கிறார்.

இன்ஸ்டாகிராமில் ஒளிப்படங்களைத் தானே வெளியிட முடியும், புத்தக விமரசனங்களை வெளியிடுவது எப்படிச் சாத்தியம்? யூலி கோஹன் இதைச் சாத்தியமாக்கி இருக்கிறார். அதாவது மனிதர்களையும், அவர்கள் வாசிக்கும் புத்தகங்களையும் இணைத்திருக்கிறார்.

புத்தகப் பிரியர்களைத் தேடிப்பிடித்து அவர்கள் வாசித்துக்கொண்டிருக்கும் புத்தகத்துடன் கிளிக் செய்து அந்தப் படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். ஒளிப்படக் குறிப்புடன், வாசகர்கள் புத்தகம் பற்றித் தெரிவிக்கும் கருத்தை விமர்சனமாக இடம்பெறச்செய்கிறார்.

இந்த வாசகர்கள் அனைவரும் நியூயார்க் நகரின் மெட்ரோ ( சப்வே) பயனாளிகள் என்பது கூடுதல் சுவாரஸ்யம். ஆம், நகரின் மெட்ரோ ரெயில் பயணத்தின் போது புத்தகம் வாசிப்பவர்களைப் பேட்டி கண்டு யூலி கோஹன் வெளியிட்டுவருகிறார்.

சமீபத்தில் நியூயார்க் நகருக்குக் குடிபெயர்ந்த யூலி கோஹன் , மெட்ரோ ரெயில் பயணத்தில் பலரும் புத்தகம் படிப்பதைப் பார்த்திருக்கிறார். அடிக்கடி இந்தக் காட்சியை எதிர்கொண்டவர் எது அவர்களை இப்படி வாசிக்கத் தூண்டுகிறது என அறிந்து கொள்வதற்காகப் புத்தக வாசிப்பு பயணிகள் சிலரிடம் பேசிப் பார்த்துள்ளார்.

பயணிகள் வாசிக்கும் புத்தகங்கள் பெரும்பாலும் நடப்பு நிகழ்வுகள் சார்ந்ததாக அல்லது வாசகரின் தனிப்பட்ட அனுபவம் சார்ந்ததாக இருப்பதைத் தெரிந்துகொண்டார். இந்தக் கதைகள் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கவே இவற்றைப் பகிர்ந்துகொள்ளத் தீர்மானித்தார். இதற்காக இன்ஸ்டாகிராமில் சப்வே புக்ரிவ்யூ எனும் பக்கத்தைத் தொடங்கினார். இந்தப் பக்கத்தில் புத்தகத்துடனான பயணிகளின் ஒளிப்படமும், புத்தகம் பற்றிய சுருக்கம் மற்றும் அதை அவர்கள் ஏன் வாசிக்கின்றனர் என்ற விவரங்களும் இடம்பெறுகின்றன.

தனிப்பட்ட தன்மையுடன் துடிப்பாக இருந்த இந்த விமர்சனங்கள் புத்தக வாசிப்பு பற்றிய புதிய பார்வையைக் கொடுத்தன. ஆகவே வாசகர்களை இந்தப் பக்கம் வெகுவாக கவர்ந்திருக்கிறது. இன்ஸ்டாகிராமின் ஆதார அம்சமான ஒளிப்படப் பகிர்வுடன் வாசிப்பு அனுபவமும் கைகோத்திருப்பது இணையவாசிகளைக் கவர்ந்திழுத்து வருகிறது. இன்ஸ்டாகிராமில் இந்தப் பக்கத்துக்கு 33 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பின் தொடர்பாளர்கள் கிடைத்துள்ளனர்.

இன்ஸ்டாகிராம் பக்கம் தவிர சப்வே புக்ரீவ்யூவுக்காகத் தனியே இணைய தளமும் (http://www.subwaybookreview.com/) இவர் அமைத்திருக்கிறார்.

மக்களுடன் தொடர்புகொண்டு அவர்களின் கதைகளைப் பகிர்ந்துகொள்வதே தனது நோக்கம் என்று கூறும் யூலி கோஹன் தனது இணையதளத்தில் எழுத்தாளர்களின் நேர்காணல்களையும் அவ்வப்போது வெளியிட்டுவருகிறார்.

புத்தக விமர்சன இன்ஸ்டாகிராம் பக்கம்: https://instagram.com/subwaybookreview/

Leave a Reply