பிரம்மபுத்திரா நதிநீரில் சீனா மின்சார திட்டம். இந்தியாவிக்கு பாதிப்பில்லை என உமாபாரதி தகவல்
பிரம்மபுத்திரா நதியில் ஓடும் நீரில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் மூன்று திட்டங்களை சீனா நிறைவேற்றவுள்ளது. இதுகுறித்த கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமாபாரதி, சீனா, ஓடும் நதியில்தான் மின்சாரம் தயாரிப்பதாகவும், இதனால் இந்தியாவிற்குள் வரும் நீரின் அளவு குறையாது என்பதால் இந்தியாவுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படுத்த வாய்ப்பில்லை என்றும் அவர் இன்று மக்களவையில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து உமாபாரதி மேலும் கூறியதாவது, ““சீனாவின் 12-வது ஐந்தாண்டு திட்ட அறிக்கை வெளியாகியுள்ளது. அதில் யார்லுங் சாங்போ-பிரம்மபுத்திரா நதிநீர் மீது மேலும், 3 நீர் மின்சக்தி திட்டங்களை தொடங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது மத்திய அரசுக்கு தெரியவந்துள்ளது.
இந்த மின்சக்தித் திட்டங்கள் பற்றிய முழு விவரங்கள் இல்லாததால் அதன் தாக்கம் குறித்து துல்லியமாக எதுவும் கூறமுடியவில்லை” என்று கூறிய உமாபாரதி இந்த திட்டங்கள் ஓடும் நீரில் மின்சக்தி உற்பத்தித் திட்டம் என்பதால் இந்தியாவிற்குள் வரும் பிரம்மபுத்திரா நதிநீரில் எந்த வித தாக்கத்தையும் ஏற்படுத்த வாய்ப்பில்லை என்று தெரிவித்தார்.