காஷ்மீரில் ஐ.எஸ்.ஐ.எஸ் கொடிகளை ஏந்திய பிரிவினைவாதிகள். பெரும் பரபரப்பு
இந்தியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் உளவுத்துறை மத்திய மற்றும் மாநில அரசுகளை எச்சரித்திருக்கும் நிலையில், காஷ்மீரில் ஐ.எஸ்.ஐ.எஸ்.தீவிரவாத இயக்கம் மற்றும் பாகிஸ்தானின் தேசிய கொடிகளை பிரிவினைவாதிகள் ஏற்றி பறக்கவிட்ட சம்பவம் நாடு முழுவதையும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
காஷிமீரில் அவ்வப்போது பாகிஸ்தானின் கொடிகளை பிரிவினைவாதிகள் ஏற்றுவதும், கையில் ஏந்தி செல்வதும் நடைபெற்று வரும் நிலையில் நேற்று ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் கொடியையும் கையில் ஏந்தி சில பிரிவினைவாதிகள் காட்டியுள்ள விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
தாய் நாட்டிற்கு துரோகம் செய்யும் நோக்கில், இந்திய உணவை சாப்பிட்டுவிட்டு, இந்திய அரசு வழங்கும் சலுகைகளை அனுபவித்துவரும் அவர்கள் , அவ்வப்போது இந்திய எல்லைக்குள்ளேயே பாகிஸ்தான் தேசிய கொடியை ஏற்றி பரபரப்பை ஏற்படுத்துகின்றனர்.
இந்நிலையில் ஸ்ரீநகரில் உள்ள பிரபல ஜாமியா மஸ்ஜித் அருகாமையில் இருக்கும் ஒரு கட்டிடத்தின் மொட்டை மாடியில் நின்றபடி சிலர் தீவிரவாத இயக்கங்களான ஐ.எஸ்.ஐ.எஸ்., லஷ்கர் இ தொய்பா மற்றும் தீவிரவாதத்தின் தோற்றுவாயாக விளங்கும் பாகிஸ்தான் நாட்டு தேசிய கொடியை உயர்த்தி பிடித்தபடி முழக்கமிட்டனர்.
இதுபற்றிய தகவல் அறிந்ததும் சம்பவ இடத்தில் ஏராளமான மக்கள் குவிந்து நின்று வேடிக்கை பார்த்தனர். போலீசார் வருவதைப் பார்த்த பிரிவினைவாதிகள் அந்த மாடியில் இருந்து கீழே இறங்கி தப்பிச் சென்று விட்டனர். கொடிகளை ஏந்திய நபர்களை பிடிக்கும் முயற்சியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.