மரண தண்டனையை ஒழிக்க தனிநபர் மசோதா. கனிமொழி எம்.பி அதிரடி முடிவு
மரண தண்டனையை ஒழிக்க வேண்டும் என உலகின் பல நாடுகள் வலியுறுத்தி வந்த போதிலும் இன்னும் இந்தியா உள்பட ஒருசில நாடுகளில் மரண தண்டனை வழக்கத்தில் இருந்துகொண்டுதான் இருக்கின்றது. நேற்று முன் தினம் கூட மும்பை தொடர் வெடிகுண்டு குற்றவாளி யாகூப் மேமனுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில் மரண தண்டனை ஒழிப்பு தொடர்பாக தனிநபர் மசோதாவை நாடாளுமன்றத்தில் கொண்டு வரவுள்ளதாக திமுக தலைவர் கருணாநிதியின் மகளும், ராஜ்ய சபா எம்.பியுமான கனிமொழி வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.
கனிமொழி எம்.பி. மேலும் தனது அறிக்கையில் கூறியுள்ளதாவது:
“நமது நாட்டில் கடந்த 3 ஆண்டுகளில் 3 பேருக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டிருக்கிறது. நீண்ட சட்ட நடைமுறைகள் இருக்கின்றன. என்றாலும், சொந்த குடிமக்களின் உயிரைப் பறிக்கும் மனிதாபிமானமற்ற ஏற்கத்தகாத மரணத் தண்டனைகள் இன்னமும் நிறைவேற்றப்படுவது வேதனை அளிக்கிறது.
மரண தண்டனையை தி.மு.க. தொடர்ந்து எதிர்த்து வருகிறது. 2014ஆம் ஆண்டு திருச்சியில் நடந்த தி.மு.க. மாநில மாநாட்டில் மரண தண்டனைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மரண தண்டனையை ரத்து செய்வது குறித்து ஆய்வு செய்ய சட்ட ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் பரிந்துரைகள் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு விவாதிக்கப்படும் வரை கருணை மனுக்கள் மீது முடிவு எடுப்பதை ஜனாதிபதி தவிர்க்க வேண்டும்.
150 நாடுகள் மரணத் தண்டனையை ஒழித்து விட்டன. ஐ.நாவும் இதனை வலியுறுத்தி வருகிறது. மரணத் தண்டனையை ரத்து செய்வது தொடர்பாக பாராளுமன்ற மேல்சபையில் தனிநபர் மசோதா ஒன்றை தாக்கல் செய்ய இருக்கிறேன்”
இவ்வாறு கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்.