உ.பி. தொழில்நுட்ப கல்லூரிக்கு அப்துல்கலாம் பெயர். முதல்வர் அகிலேஷ் யாதவ் அறிவிப்பு
மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் அவர்களின் மறைவில் நாட்டு மக்கள் அனைவரும் துயரத்தில் ஆழ்ந்துள்ளனர். அவரது நினைவை போற்றும் வகையில் பல்வேறு அறிவிப்புகளை மத்திய மாநில அரசுகள் அறிவித்து வருகின்றன. அப்துல்கலாமின் பிறந்த நாளை இளைஞர் எழுச்சி நாளாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் உத்தரபிரதேச மாநிலத்தில் செயல்பட்டு வரும் தொழில்நுட்ப கல்லூரி ஒன்றுக்கு அப்துல்கலாமின் பெயர் சூட்டப்படும் என அம்மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ் அறிவித்துள்ளார்.
உத்தரபிரதேச மாநில தலைநகரான லக்னோவில் உ.பி.தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது . இப்பல்கலைக்கழகம் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் தொழில் நுட்ப பல்கலைக்கழகம் என பெயர் மாற்றப்படும் என்று முதல்வர் அகிலேஷ் யாதவ் அறிவித்துள்ளார்.
இந்த பல்கலைக்கழகத்தின் புதிய வளாகத்தில் அப்துல் கலாம் நினைவாக மிகப்பெரிய அளவில் நினைவுச்சின்னம் ஒன்று அமைக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
உத்தரபிரதேச மாநிலத்துடன் ஆழமான பிணைப்பை அப்துல் கலாம் கொண்டிருந்ததாக அவர் நினைவுகூர்ந்தார்.