‘கிரெடிட் கார்டு’ அவசியம்தானா?

credit-card11-350x250

தற்போது ‘கிரெடிட் கார்டு’ பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. காய்கறிக் கடைகள் முதல் ஓட்டல்கள் வரை இதை உபயோகிக்க முடிவது ஒரு பெரிய வசதி.

ஆனால் சிலருக்கு ஒரு சஞ்சலம், ‘கிரெடிட் கார்டு வாங்கிப் பயன்படுத்தலாமா, வேண்டாமா?’ என்று.

கிரெடிட் கார்டுக்கு சாதகமான விஷயங்கள்…

முதலாவது, பாதுகாப்பு. கையில் மொத்தமாக பணத்தைச் சுமந்து செல்ல வேண்டியதில்லை என்பதால் கிரெடிட் கார்டு, பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கிறது. விழாக்கால ஜனநெருக்கடி நேரங்களில், பர்ஸ் பணம் குறித்த கவலையின்றி பொருட்கள் வாங்க ஏற்றது கிரெடிட் கார்டு. பர்சில் கார்டை செருகிக்கொண்டு போய், ஜாலியாக ஷாப்பிங் செய்து வந்துவிடலாம்.

சம்பளதாரர்கள் மாதக் கடைசியில் பர்ஸ் வறண்டு தவிக்கையில் கிரெடிட் கார்டு ஆபத்பாந்தவனாய் கைகொடுக்கும். பிறரிடம் கடன் கேட்டு கையேந்தாமல் நாமே சமாளித்துக்கொள்ளலாம். தேவைப்பட்டால் கிரெடிட் கார்டு மூலம் பணமாகவும் எடுக்கலாம்.

கிரெடிட் கார்டு மூலம் செய்யும் செலவுக்கு குறிப்பிட்ட காலஅளவுக்கு வட்டி கிடையாது. எனவே சரியாகப் பயன்படுத்துவோருக்கு இது, வட்டியில்லா கடன் வழியாக உதவும்.

செலவு செய்த தொகையை மாதாந்திர தவணையாக பிரித்துச் செலுத்தும் வசதியையும் சில கார்டுகள் வழங்குகின்றன.

கிரெடிட் கார்டில் கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்…

நமக்கான ‘பில்’ வந்தவுடனே உரிய தேதிக்குள் பணம் செலுத்திவிடுவது அவசியம். இல்லாவிட்டால் வட்டி மேல் வட்டி எகிறிவிடும்.

கிரெடிட் கார்டு மூலம் பணம் எடுப்பதை கூடியமட்டும் தவிர்க்க வேண்டும்.
கார்டு தானே என்று அடுத்தவருக்கு பொருட்கள் வாங்கிக் கொடுப்பது, கார்டை பயன்படுத்தினால் இந்தத் தள்ளுபடி, சலுகை கிடைக்கும் என்ற விளம்பரத்தைப் பார்த்து தேவையற்ற பொருட்களை வாங்குவது எல்லாம் சிரமத்தில் தள்ளிவிடும்.

முன்னெல்லாம் வங்கிகள் மட்டும்தான் கிரெடிட் கார்டை கொடுத்தன. இப்போது தனியார் நிதி நிறுவனங்கள், சேவை மையங்கள் எல்லாம் கூட கார்டுகளை தருகின்றன. வங்கிக்கு வங்கி, கார்டுக்கு கார்டு வித்தியாசம் இருக்கும். சிலர் சர்வீஸ் சார்ஜ் குறைவாகப் போடுவார்கள். சில கார்டுகளுக்கு அதை எல்லாக் கடைகளிலும் பயன்படுத்தலாம் என்ற வசதி இருக்கும். வேறு சில கார்டுகளுக்கு கடைகளில் நிறைய சலுகை கிடைக்கும். இவை எல்லாவற்றையும் மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.

எல்லாவற்றுக்கும் மேலாக, ‘கிரெடிட் கார்டு’ என்பது ‘கடன் அட்டை’தான். எதிர்கால வருவாயைச் சுரண்டித்தான் செலவு செய்கிறோம். எனவே அதை கட்டுப்பாட்டோடு பயன்படுத்துவது நலம்!

Leave a Reply