அது 1986-ம் ஆண்டு. எம்.எம்.சி. மருத்துவக் கல்லூரியில் மைக்ரோபயாலஜி துறை பேராசிரியராக இருந்தார் ஒரு மருத்துவர். அவருக்கு உலகின் பல பகுதிகளிலிருந்து வரும் மருத்துவ இதழ்களைப் படிப்பதில் ஆர்வம் இருந்தது. அதில் பல இதழ்களிலும் அந்தந்த நாடுகளில் நடந்துகொண்டிருக்கும் எய்ட்ஸ் குறித்த ஆய்வுகளை வெளியிட்டிருந்தனர். நம் நாட்டிலும் இதுபோன்ற ஆய்வின் அவசியத்தை உணர்ந்திருந்தார் அந்த மருத்துவர்.
தன்னுடைய முதுநிலை பட்ட மாணவி நிர்மலாவுடன் 100 ரத்த மாதிரிகளைத் தேர்ந்தெடுத்து நடத்திய பரிசோதனையில் 6 பேரின் ரத்த மாதிரிகளில் எச்.ஐ.வி. பாதிப்பு உள்ளதைக் கண்டறிந்தார் அந்த மருத்துவர். குறிப்பிட்ட அந்த ரத்த மாதிரிகளை வேலூர் சி.எம்.சி. மருத்துவமனைக்கும் அமெரிக்காவின் பரிசோதனை கூடத்துக்கும் அனுப்பி சோதித்து, அந்த ரத்த மாதிரிகளில் எச்.ஐ.வி. பாதிப்பு இருப்பதை ஆதாரப்பூர்வமாக வெளிப்படுத்தினார்.
அவர்தான் இந்தியாவில் எய்ட்ஸ் நோய் பாதிப்புக்கு உள்ளானவர்களை முதன்முதலாக அடையாளம்கண்டு அறிவித்த டாக்டர் சுனிதி சாலமன். ‘இந்தியா ஒரு புனித நாடு. இங்கிருப்பவர்களுக்கெல்லாம் எய்ட்ஸ் வராது’ என்பதைப் போன்ற பழமைவாதத்தைப் புரட்டிப் போட்டது, சுனிதி சாலமனின் இந்த ஆய்வு.
தனி ஆய்வு மையம்
எச்.ஐ.வி. பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு டாக்டர்களே பயந்த காலத்தில், தொடர்ந்து எச்.ஐ.வி. குறித்த பயங்களை, சந்தேகங்களைப் போக்குவதற்கும் அது குறித்த விழிப்புணர்வைப் பொதுமக்களிடம் ஏற்படுத்தவும் ஒய்.ஆர்.ஜி. கேர் என்னும் ஆய்வு மையத்தைத் தொடங்கினார்.
எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்ட பெண்ணின் கர்ப்பத்தில் வளரும் குழந்தைக்கும் அந்தப் பாதிப்பு ஏற்படும் நிலையைத் தவிர்ப்பதற்கான சிகிச்சை, பாதிப்புக்குள்ளான பெண்களை மனதளவில் தைரியப்படுத்துவது, கூட்டு மருந்து சிகிச்சைகளை எடுத்துக்கொள்ள வைப்பது எனத் தொடர்ந்து இயங்கினார்.
பெரும்பாலான பெண்கள் தங்களின் கணவனின் மூலமாகவே எச்.ஐ.வி. பாதிப்புக்கு ஆளாவதை வெளிப்படுத்தினார் சுனிதி சாலமன். இதன் விளைவாகவே ஆண்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, ‘பாதுகாப்பான உறவுக்கு ஆணுறை அவசியம்’ என்பதைப் போன்ற பிரச்சாரங்கள் சூடுபிடித்தன.
எச்.ஐ.வி பாதிப்புள்ளானவர்களுக்குத் திருமணம்
எச்.ஐ.வி. பாதிப்புக்குத் தான் உள்ளானது தெரிந்து, இன்னொருவரின் வாழ்க்கையையும் திருமணம் என்னும் பந்தத்தால் பாழாக்கக் கூடாது என்ற எண்ணத்தோடு திருமணத்தை மறுப்பவர்களும் இருந்தனர். இவர்களின் வாழ்க்கையில் ஒரு பிடிப்பை திருமண பந்தத்தின் மூலம் ஏற்படுத்தியவர் டாக்டர் சுனிதி சாலமன்.
ஜாதகம் பார்த்து, ஏழு பொருத்தம் பார்த்து திருமணம் நடத்துவார்கள். ஆனால் எச்.ஐ.வி.பாதிப்புக்கு உள்ளானவர்களின் ரத்தத்தில் இருக்கும் CD4 செல்களின் எண்ணிக்கை பொருந்துகிறதா என்று சோதித்துப் பார்த்து, அவர்களுக்குத் திருமணம் செய்துவைத்தார் டாக்டர் சுனிதி சாலமன். பொதுவாக எச்.ஐ.வி. பாதிப்புக்குள்ளானவர்கள் திருமண உறவுக்குள் செல்வதை இந்தச் சமூகம் ஏற்றுக் கொள்ளாத அந்தக் காலத்தில், மருத்துவரீதியாக அதை ஆதரித்தவர் டாக்டர் சுனிதி சாலமன்.
CD4 என்னும் செல்கள்தான் நம் உடலின் போர் வீரர்கள். நோய் எதிர்க்கும் திறன் கொண்ட இந்தச் செல்களின் எண்ணிக்கை போதுமான அளவுக்கு ஆண், பெண் இருவரிடமும் இருக்கும்பட்சத்தில் அவர்கள் திருமணம் செய்துகொள்ளலாம் என்பதை நடைமுறைப்படுத்தி எண்ணற்ற எச்.ஐ.வி. பாதிப்புக்கு உள்ளானவர்களிடையே திருமண பந்தத்தை ஏற்படுத்தினார்.
எச்.ஐ.வி குறித்த ஆய்விலும் பரிசோதனையிலும் முன்னோடியாகத் திகழந்த டாக்டர் சுனிதி சாலமனின் மறைவு, மருத்துவ உலகில் ஈடுசெய்ய முடியாத இழப்பு.