பெர்ஃப்யூம், பாடிஸ்ப்ரே… மறைந்திருக்கும் ரசாயனங்கள்…

p20b

ளைஞர் ஒருவர் தன் மீது பாடி ஸ்ப்ரே அடித்தவுடன். எல்லா திசைகளில் இருந்தும் பெண்கள் ஓடி வந்து அவர் மீது பாய்வார்கள். தேவகன்னிகள்கூட அந்த வாசத்தால் வசீகரிக்கப்படுவது போல ரொம்பத்தான் அளக்கின்றன ஸ்ப்ரே விளம்பரங்கள். வியர்வை துர்நாற்றம் இல்லாமல் இருக்க பாடிஸ்ப்ரே, டியோடரன்ட், சென்ட், பெர்ஃப்யூம் என எத்தனை வகைகள்? அதிலும் சாக்லெட், லாவண்டர், ரோஸ் எனப் பல வாசனைகளால், ஸ்ப்ரே பிரியர்கள் அதிகம். குளித்தாரா… குளிக்கவில்லையா என்பதே தெரியாத அளவுக்கு, டியோடரன்ட், பெர்ஃப்யூமில் ஒரு குளியல் போட்டுவிடுகின்றனர்.

பெரியவர்கள் பாடிஸ்ப்ரே அடிப்பதைப் பார்த்து, ‘எனக்கும் அடி’ எனக் கையைத் தூக்கிக் காட்டி அடம்பிடிக்கின்றனர் சிறு குழந்தைகள். குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் பயன்படுத்தும் பொருளாக மாறிவிட்டன பாடி ஸ்ப்ரேக்கள். இவை, எந்த அளவுக்குப் பாதுகாப்பானவை? இவற்றில் சேர்க்கப்படும் ரசாயனங்கள் என்னென்ன? இவை அவசியம்தானா? இவற்றைப் பாதுகாப்பான முறையில் எப்படிப் பயன்படுத்துவது?

நம் சருமத்தில் எபிக்ரைன் (Epicrine), அபோக்ரைன் (Apocrine) என்ற இரண்டு வகையான வியர்வைச் சுரப்பிகள் உள்ளன. முகம், கை, கால், முதுகு என எபிக்ரைன் உடல் முழுவதும் இருக்கிறது. நரம்பு மண்டலத்தின் கீழ் இவை செயல்படுகின்றன. அக்குள், மார்பகங்கள் போன்ற அந்தரங்க உறுப்புகளில் அபோக்ரைன் உள்ளது. இதை, ஹார்மோன்கள் கட்டுப்படுத்துகின்றன.

எபிக்ரைன், நாம் பிறந்த ஓர் ஆண்டில் செயல்பட ஆரம்பிக்கும். அபோக்ரைன், பருவம் எய்திய பிறகே செயல்படத் தொடங்கும். இதனால்தான் சிலருக்குப் பருவம் எய்திய பிறகு, வியர்வை நாற்றம் அதிகமாக வருகிறது.

வியர்வைக்கு வாசம் கிடையாது. வியர்வையில் அமோனியா இருக்கும். அது, சருமத்தில் உள்ள கிருமிகளில் பட்டு அவை உடையும்போது, வியர்வை துர்நாற்றமாகிறது. அக்குள் பகுதி அதிகப்படியான ஈரப்பதத்துடன், காற்று புகாதவாறு இருப்பதால், அங்கு எளிதில் கிருமிகள் பரவுகின்றன. சரியான பராமரிப்பு இல்லாதபோது, அவை தொற்றாகவும் மாறிவிடும்.

ரசாயனங்களால் ஏற்படும் விளைவுகள்

ப்ரொப்லீன் க்ளைகால் ரசாயனத்தில் சிந்தடிக் மற்றும் நேச்சுரல் நறுமணங்கள் சேரும். இரண்டுமே அலர்ஜி ஏற்படுத்தக்கூடியவை. பாராபன் ரசாயனம் மார்பகப் புற்றுநோயை வரவழைக்கும் என்ற கருத்து இருந்தாலும், அவை முழுமையாக நிருபிக்கப்படவில்லை. இதனால், அக்குள் பகுதிகளில் அதிகப்படியான எரிச்சல், நமைச்சல் ஏற்படும். அலுமினியம் கலக்கப்பட்ட வாசனைத் திரவத்தில் மறதி நோய், டிமென்ஷியா, சிறுநீரக நோய்கள் வருவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன. பால்சம் பெரு ரசாயனம் காற்றின் மூலமாக, மூக்கு வழியே மூளைக்குச் செல்லும். இது, ஆஸ்துமா, இளைப்பு, ரத்தக்குழாய் பாதிப்பு, ஒற்றைத் தலைவலி, சைனஸ் பிரச்னை, சரும எரிச்சல் போன்றவற்றை ஏற்படுத்தும்.

வாசனைத் திரவியத்தில் உள்ள ரசாயனங்கள்

டியோடரன்ட், பெர்ஃப்யூம் என எந்த வகை வாசனைத் திரவியமாக இருந்தாலும் அதில் ஆல்கஹால், புரொபலின் கிளைக்கால் (Propylene glycol), பாராபன் (Paraben), பால்சம் பெரு (Balsam peru) ஆகிய ரசாயனங்கள் கலக்கப்பட்டிருக்கும். இவை, எந்த அளவில் சேர்க்கப்படுகின்றன என்பதைப் பொருத்து, டியோடரன்ட், பெர்ஃப்யூம் என வேறுபடுகின்றன.

டியோடரன்ட் (Deodorant)

இது கிருமிகளின் வளர்ச்சியைக் குறைத்து, நறுமணத்தின் மூலமாகத் துர்நாற்றத்தை மறைக்கும். ஆனால், வியர்வையைக் குறைக்காது. இதைச் சருமத்தில் நேரடியாகப் படும்படி பயன்படுத்தலாம் என விளம்பரப் படுத்துகின்றனர். அலர்ஜி இருப்பவர்கள், துணியில் அடித்துக் கொள்வது பாதுகாப்பானது. இதில், 10-15 சதவிகிதம் மைல்டு ஆல்கஹால் கலக்கப்படுகிறது.

ஆன்டிபர்ஸ்பிரன்ட் (Antiperspirant)

இது கிருமிகளின் வளர்ச்சியைக் குறைக்கும். துர்நாற்றத்தை மறைக்கும். அதே நேரத்தில், வியர்வையின் அளவையும் குறைக்கும். அதாவது, 100 மில்லி வியர்வை ஒருவருக்கு சுரக்கிறது எனில், அதில் 20 சதவிகிதம் வரை குறைக்கும். இதில், உள்ள அலுமினியம் சால்ட், அலுமினியம் குளோரைட் ஹெக்சா ஹைட்ரேட் போன்றவை, தற்காலிகமாக வியர்வைச் சுரப்பிகளைத் தடை செய்யும். இதிலும், 10-15 சதவிகிதம் மைல்டு ஆல்கஹால் கலக்கப்படுகிறது. இது, ஸ்ப்ரே, ரோல் ஆன், பம்ப், ஏரோசால் போன்ற வடிவங்களில் கிடைக்கிறது.

பெர்ஃப்யூம்

95 சதவிகிதம் வாசனை மட்டுமே கொண்டது. 15-25 சதவிகிதம் கான்சன்ட்ரேட்டட் ஆல்கஹால் கலக்கப்பட்டுள்ளது. அதிகப்படியான ஆல்கஹால் கலவை இருப்பதால், அதிக நறுமணத்தைத் தருகிறது. எந்த பெர்ஃப்யூமையும் நேரடியாகச் சருமத்தில் ஸ்ப்ரே செய்யக் கூடாது. உடைகளில்தான் ஸ்ப்ரே செய்ய வேண்டும். பிக்சேடீவ் (Fixatives) மற்றும் சால்வன்ட்ஸ் (Solvents) போன்றவை, திரவம் ஆவியாகாமல் பாதுகாக்கின்றன.

வியர்வை துர்நாற்றம் குறைய!

மக்னிஷியம் நிறைந்த உணவுகளான கீரைகள், நட்ஸ், விதைகள், மீன், பப்பாளி, பீட்ரூட், கடுகு, தர்பூசணி, வெள்ளரி, பட்டாணி, முந்திரி, தவிடு நீக்கப்படாத பிரவுன் அரிசி ஆகியவற்றை சாப்பிடவும். வைட்டமின் பி,சி உணவுகளை சாப்பிடுவது நல்லது.

தினமும் 2-3 லிட்டர் நீரைக் குடிக்க வேண்டும். நீர்ச்சத்துக்கள் நிறைந்த கனி, காய்கறிகளைச் சாப்பிட வேண்டும்.

தினமும் இரண்டு வேளை வெதுவெதுப்பான நீரில் குளிக்க வேண்டும்.

உணவில் வெங்காயம், பூண்டு, மசாலாப் பொருட்களை அளவோடு சேர்க்க வேண்டும். காபின், ஆல்கஹால், புகைப்பழக்கம், வியர்வை துர்நாற்றத்தை அதிகரிக்கும். எனவே, தவிர்ப்பது நல்லது.

ரூம் ஸ்ப்ரே பயன்படுத்தலாமா?

உடலில் அடிக்கும் ஸ்ப்ரேக்களிலேயே இவ்வளவு ரசாயனங்கள் என்றால், வீடு புத்துணர்வாக இருக்க அடிக்கும் ஸ்ப்ரேக்களால் என்ன பாதிப்பு வரும்?

“ஆல்கஹால் மற்றும் வீரியமிக்க கெமிக்கல்களில் தயாரிக்கப்படும் ரூம் ஸ்ப்ரேக்களை ஏ.சி அறை, கதவு, ஜன்னல் மூடிய அறையில் அடித்தால் சிலருக்கு அலர்ஜி, இளைப்பு, சரும எரிச்சல் வரலாம். ஆஸ்துமா நோயாளிகளுக்கு மூச்சுத் திணறல் ஏற்படலாம். அதேபோல் குழந்தைகள், கர்ப்பிணிகள், சுவாசப் பிரச்னை இருப்பவர்கள் இருக்கும் அறையில் ரூம் ஸ்ப்ரே பயன்படுத்தக் கூடாது. இயற்கையான முறையில் தயாராகும் டீ ட்ரீ ஆயில், லாவண்டர், அரோமா, சந்தனம் ஆகியவை ஸ்டிக் வகைகளிலும், எண்ணெய் வகைகளிலும் கிடைக்கின்றன. இவற்றைப் பயன்படுத்துவதால், எந்தவிதப் பாதிப்புகளும் ஏற்படாது.  துர்நாற்றம் நீங்கி,  வீட்டின் அறையே சுகந்தமான வாசனையில் நம்மை சுண்டியிழுக்கும்.”

பாதுகாப்பு வழிகள்!

ஏ.சிஅறையில் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.

கழுத்தில் தொடங்கி கால் வரை ஸ்ப்ரே செய்யக் கூடாது. ஸ்ப்ரே செய்யும் அளவைக் குறைத்துக்கொள்வது நல்லது.

காது, மூக்கு, வாய் போன்ற துவாரங்கள் அருகே நறுமணங்களைப் பயன்படுத்தக் கூடாது.

ஈர உடலுடன் வாசனைத் திரவத்தைப் பயன்படுத்தக் கூடாது. ஈரத்தை உலர்த்திய பின் ஆடைகளின் மீது ஸ்ப்ரே செய்வது பாதுகாப்பானது.

குறைந்தது ஒரு அடி தூரத்திலிருந்து பெர்ஃயூ்மை ஸ்ப்ரே செய்வது நல்லது. ஏனெனில், அதில் இருப்பது கான்சன்ட்ரேட்டட் ஆல்கஹால்.

குழந்தைகள், கர்ப்பிணிகள் போன்றோர் கெமிக்கல் வாசனைத் திரவியங்கள் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.

ஆலம் கிரிஸ்டலைத் (Alum crystal) தண்ணீரில் தொட்டு அக்குளில் தடவலாம். மில்க் ஆஃப் மெக்னிஷியா (Milk of magnesia), ஆப்பிள் சிடர் வினிகர் (Apple cider vinegar) ஆகியவற்றையும் அக்குள் பகுதிகளில் தடவலாம். இவை துர்நாற்றத்தைப் போக்கும். எந்தப் பாதிப்புகளையும் ஏற்படுத்தாது.

லாவண்டர், லாங் லாங், லெமன், பைன், பேசில், சின்னமன் போன்ற எண்ணெய்களைப் பயன்படுத்தி, வியர்வைத் துர்நாற்றத்தை விரட்டலாம்.

Leave a Reply