‘கத்தி’ தெலுங்கு ரீமேக்கில் விஜய் கேரக்டரில் ஜூனியர் என்.டி.ஆர்?
விஜய், காஜல் அகர்வால் நடிப்பில் வெளியான ‘ஜில்லா’ படம் சமீபத்தில் தெலுங்கில் டப் செய்யப்பட்டு வெளியானது. இந்த படம் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் சூப்பர் ஹிட் ஆகியுள்ள நிலையில் விஜய்யின் இன்னொரு வெற்றிப்படமான ‘கத்தி’ படத்தை தற்போது ரீமேக் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
கதிரேசன், ஜீவானந்தம் என இரு வேடங்களில் விஜய் மிகவும் ஆவேசமாக நடித்த இந்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியிருந்தார். தமிழக விவசாயிகளின் தண்ணீர் மற்றும் விவசாய நிலங்களை வெளிநாட்டு நிறுவனங்கள் அபகரித்ததை எதிர்த்து போராடும் ஒரு வீர இளைஞனின் கதைதான் ‘கத்தி’. இந்த படத்தின் தெலுங்கில் ரீமேக்கில் ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கவுள்ளதாகவும் இந்த படத்தை தெலுங்கில் கோபிசந்த் என்ற இயக்குனர் இயக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இவர் ஏற்கனவே ‘பாடிகார்டு’, பலுபு ஆகிய படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரபல ஆந்திர தயாரிப்பாளர் தில்ராஜூ தயாரிக்கும் இந்த படத்தின் திரைகதையை தெலுங்கு ரசிகர்களுக்கு ஏற்றவாறு மாற்றியமைக்க ஏ.ஆர்.முருகதாஸ் ஒப்புக்கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. சமந்தா கேரக்டரில் நடிக்க நடிகை தேர்வு செய்யப்பட்டு வருவதாகவும், அடுத்த மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.