திருமலை–திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சதுலவாடா கிருஷ்ணமூர்த்தி திருப்பதியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:–
ஆந்திராவில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் திருமலை–திருப்பதி தேவஸ்தானம் சார்பில் சீனிவாசா வைபவ உற்சவம் நடத்தப்பட உள்ளது. தற்போது விசாகப்பட்டினம், குண்டூர் பகுதியில் சீனிவாசா வைபவ உற்சவம் நடந்து வருகிறது. அந்த நிகழ்ச்சியில் ஏழுமலையான் கோவிலில் நடக்கும் சுப்ரபாத சேவையில் இருந்து ஏகாந்த சேவை வரை அனைத்து பூஜைகளும் நடக்கும்.
நெல்லூர் மாவட்டத்தில் 8–ந்தேதியில் இருந்து 14–ந்தேதி வரை சீனிவாசா வைபவம் நடக்கிறது. அத்துடன் 15–ந்தேதி வெங்கடாஜலபதி கல்யாண உற்சவமும் நடக்கிறது. மேற்கண்ட இரு உற்சவங்களை எங்கள் பகுதியில் நடத்த வேண்டும் என பொதுமக்கள் கேட்டுக்கொண்டால், அதன்படி திருமலை–திருப்பதி தேவஸ்தானம் சார்பில் நடத்தப்படும்.
திருப்பதியில் உள்ள மாதவம் அல்லது விஷ்ணு நிவாசம் விடுதிகளில், ஏதேனும் ஒரு விடுதியில் தினமும் 300 ரூபாய் கட்டண பிரத்யேக பிரவேச தரிசனத்துக்கு டிக்கெட் வழங்குவது தொடர்பாக அதிகாரிகள், அர்ச்சகர்கள் ஆகியோருடன் ஆலோசனை கூட்டம் நடத்தி முடிவெடுக்கப்படும். தேவஸ்தானத்தில் உள்ள இளநிலை உதவியாளர்கள் காலிப்பணியிடங்களை உள்ளூர் ஆட்களை கொண்டு நிரப்ப அரசுடன் பேசி முடிவெடுக்கப்படும்.
திருமலை, திருப்பதி பகுதியில் தண்ணீர் பற்றாக்குறை இல்லாமல் இருக்க, திருப்பதியில் உள்ள பாலாஜி நீர் நிலையில் இருந்து கூடுதலாக குழாய்கள் பதித்து அதன் மூலம் தண்ணீர் கொண்டு வந்து மக்களுக்கும், பக்தர்களுக்கும் வினியோகம் செய்யப்படும். திருப்பதியில் 9 பிரதான சாலைகளை விரிவுப்படுத்தி சாலை ஓரம் பூஞ்செடிகள் அமைத்துப் பராமரிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்