லலித மோடியை கைது செய்ய பிடிவாரண்ட் பிறப்பித்த மும்பை நீதிமன்றம்
கடந்த சில நாட்களாக பாராளுமன்றத்தின் இரு அவைகளும் முடங்குவதற்கு காரணமான லலிதமோடிக்கு ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்ட் ஒன்றை மும்பை நிதி மோசடி சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. பல கோடி ரூபாய் ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளான லலித் மோடியை கைது செய்து, ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்டை நீதிமன்றம் பிறப்பித்துள்ளதால் இந்திய அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த 2010ஆம் ஆண்டு, ஐ.பி.எல். முன்னாள் தலைவர் லலித் மோடி ரூ.470 கோடி நிதி மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. இதுகுறித்து பி.சி.சி.ஐ அளித்த புகாரின் பேரில் அவர் மீது கிரிமினல் வழக்கு தொடரப்பட்டது. இது குறித்து அமலாக்கத்துறை சார்பில், லலித் மோடியை கைது செய்ய பிடிவாரண்ட் பிறப்பிக்க மும்பை நிதி மோசடி தொடர்பான நீதிமன்றத்தில் சமீபத்தில் மனு அளிக்கப்பட்டது.
இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கனவே பலமுறை மோடிக்கு, அமலாக்கத்துறை நினைவூட்டல் கடிதங்களை எழுதி, விசாரணைக்கு ஆஜராக கேட்டுக்கொண்ட போதிலும், அவர் ஆஜராகவில்லை. தற்போது லண்டனில் இருக்கும் அவர் தனக்கு இந்தியாவில் தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் இருப்பதாக கூறி ஆஜராக மறுத்தார். எனவே, அவரை கைது செய்து இந்தியா கொண்டு வர வேண்டுமென அமலாக்கத்துறை அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தது.
இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், லலித் மோடிக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது. நீதிமன்றத்தின் உத்தரவை தொடர்ந்து இங்கிலாந்தில் பதுங்கியுள்ள லலித் மோடியை கைது செய்து இந்தியாவுக்கு கொண்டு வர நடவடிக்கைகள் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது