வயிற்றுக்கு இதமளிக்கும் தேங்காய்ப் பால்

8901d2a7-8587-4272-a09e-12bfcb3e0c94_S_secvpf

‘கற்பக தரு’ என்று தென்னை மரத்தை போற்றி, அதற்கு நம் கலாசாரத்தில் புனிதமான அந்தஸ்து அளிக்கப்பட்டுள்ளது. இறைவனுக்கு படைக்கப்படும் பூஜை பொருட் களிலும் தேங்காய் முக்கிய இடம் வகிக்கிறது. தென்னை மரத்தின் எல்லா பகுதிகளுமே மனிதர்களுக்கு பலன்தரத் தக்கதாக இருக்கிறது. தேங்காய் பல வகையான சத்துக்களை தன்னுள் நிறைத்து வைத்திருக்கிறது.

இளநீர், உயிர்காக்கும் மருந்துபோல் செயல்படுகிறது. உடலில் ஏற்படும் நீர் இழப்பை மிக சிறந்த முறையில் அது ஈடுசெய்யும். உடல் சூட்டை தணிக்கவும், குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்றுப் போக்கிற்கு மருந்தாகவும், விளையாட்டு வீரர்களுக்கு சத்து நிறைந்த பானமாகவும் இளநீர் செயல்படுகிறது. தேங்காய் இனிப்பு சுவையுடையது. உடலுக்கு குளிர்ச்சியையும், பலத்தையும் தரக்கூடியது. இதனை நாம் பொரியல், துவைல், கூட்டு, குழம்பு என எல்லாவகை சமையலிலும் பெரும்பாலும் பயன்படுத்துகிறோம்.

தேங்காயில் 61 சதவீதம் நீரில் கரையாத நார்சத்து உள்ளது. அதனால் தேங்காய் கலந்த உணவுகளை சாப்பிட்டால் அடுத்து விரைவாக பசிக்காது. இது சற்று தாமதமாகவே சர்க்கரையாக மாற்றப்படுவதால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிப்பதில்லை. உடல் எடையை குறைக்க விரும்புகிறவர்களும் ஓரளவு இதனை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். வாய்புண், வயிற்றுபுண், குடலில் உள்ள புண்களை குணப்படுத்தும் தன்மை தேங்காய்க்கு இருக்கிறது. இப்படி எல்லாம் பல நன்மைகள் தேங்காயால் இருந்தாலும், சமீப காலமாக தேங்காய் மற்றும் அதன் எண்ணெய்யின் பயன்பாடு குறைந்துவிட்டது.

‘ஸாச்சூரேட்டட் பேட்’ எனப்படும் உறையும் தன்மையுள்ள கொழுப்பு அதில் அதிகமாக இருப்பதே அதற்கு காரணமாக சொல்லப்பட்டது. தேங்காயில் உள்ள உறையும் தன்மையுள்ள கொழுப்பு ரத்தக் குழாய்களில் படிந்து மாரடைப்பை ஏற்படுத்தும் என்றும், ரத்தத்தில் கொழுப்பை அதிகரிக்கும் என்றும் சொல்லப்படுகிறது. அந்த அச்சத்தால் தேங்காய் மற்றும் அதன் எண்ணெய் பயன்பாடு குறைந்திருக்கிறது. தற்போதைய சில ஆய்வுகள் ‘‘தேங்காயில் உள்ள உறையும் தன்மையுள்ள கொழுப்பு மத்திம கொழுப்பு அமில (மீடியம்சேன் பாட்டி ஆஸிட்) வகையை சார்ந்தது.

அது உடலுக்கு நன்மை செய்யும் கொழுப்பை அதிகரிக்கும்’’ என்று கூறுகிறது. மேலும் இந்த வகை கொழுப்புகள் கல்லீரலில் சென்ற உடன் உடலுக்கு தேவைப்படும் சக்தியாக மாற்றப்படுகிறது. உடலில் கொழுப்பாக சேமிக்கப் படுவதில்லை. அதனால் உடல் எடை அதிகரிப்பதில்லை. மட்டுமின்றி தேங்காயில் உள்ள கொழுப்பு அல்சைமர் போன்ற மூளை நோய்கள், நரம்பு நோய்களை தடுக்கவும் பயன்படுகிறது. ஹார்மோன்கள் உற்பத்திக்கும் உதவுகிறது. தாய்பாலில் மட்டுமே உள்ள லாரிக் அமிலம் தேங்காயில் உள்ளது.

இது உடலுக்கு சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கின்றது. வைரஸ், பூஞ்சை மற்றும் பாக்டீரியாக்களை அழிக்கும் ஆற்றலும் இதற்கு இருக்கிறது. ஆப்பம், இடியாப்பம் போன்ற சிற்றுண்டிகளை தேங்காய் பால் தொட்டு சாப்பிடுவது வயிற்றுக்கு இதமானது.  தேங்காய் பூவை நெயில் வறுத்து, பொடி செய்து ஒரு தேக்கரண்டி வீதம் காலை, மாலை சாப்பிட்டுவந்தால் அடிக்கடி சிறுநீர் கழிக்கும் உணர்வு கட்டுப்படும்.

மாதவிடாய் கோளாறுகள் இருக்கும் பெண்களும் இதை சாப்பிட்டு வரலாம். உடல் சூட்டை போக்கும் சில மருந்துகள் தேங்காய் எண்ணெய்யில் தயார் செய்யப்படுகிறது. முற்றிய தேங்காயை காயவைத்து கொப்பரையாக்கி செக்கில் இட்டு ஆட்டி எடுக்கப்படும் எண்ணெய் மிகவும் சிறந்தது. இதை ஆய்வுகள் உறுதிப்படுத்துவதால், உலக நாடுகள் பலவற்றில் தேங்காய் எண்ணெய்யின் பயன்பாடு அதிகரித்து வருகிறது.

Leave a Reply