ஆண்டுதோறும் உயர்ந்துவரும் மது விற்பனை போல நம் கதாநாயகர்களின் சம்பள உயர்வு தயாரிப்பாளர்களுக்குத் தலைசுற்றலை ஏற்படுத்திவருகிறது. தான் நடித்த படம் வெளியாகி வரவேற்பைப் பெற்றதும், அடுத்த படத்தில் சம்பளம் எவ்வளவு கூட்டலாம் என்பதுதான் பல நடிகர்களின் நினைப்பாக இருக்கிறது. ஆனால், நாங்கள் ஒரு படத்தை வெளியிடப் படும் பாடு என்ன என்பதை நடிகர்கள் உணர வேண்டும் என்பது பல தயாரிப்பாளர்களின் கோரிக்கை.
அனைத்து முன்னணி நடிகர்களுமே ஐந்து வருடங்களுக்கு முன்பு என்ன சம்பளம் வாங்கினார்களோ அதைக் காட்டிலும் இரண்டு மடங்கில் இருந்து ஆறு மடங்குவரை சம்பளத்தை உயர்த்தியிருக்கிறார்கள். அதே அளவுக்கு இவர்களது படங்களின் வியாபாரம் உயர்ந்திருக்கிறதா என்றால் கண்டிப்பாக இல்லை. சொல்லப்போனால் சில நடிகர்களின் வியாபாரம் குறைந்திருக்கிறது.
சூதாட்டம்
படத்துக்குத் திரையரங்குகளில் கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்தே நடிகர்களின் சம்பள விவகாரங்கள் முடிவு செய்யப்படுகின்றன. ஒரு படம் பெரிய அளவுக்கு வியாபாரம் ஆகிவிட்டால், அடுத்த படத்துக்கு ஒரு நடிகர் தனது சம்பளத்தைக் கணிசமாக உயர்த்திவிடுவார். அதற்கேற்ப வியாபாரம் உயராதபோதும் உயர்ந்த சம்பளம் மட்டும் அப்படியே இருக்கும். விசித்திரமான இந்த முரண்பாட்டை எப்படிக் கையாள்வது என்று தெரியாமல் தயாரிப்பாளர்கள் கையைப் பிசைந்துகொண்டு நிற்கிறார்கள்.
இரண்டு படங்கள் தோற்று மூன்றாவது படம் பெரிய அளவில் வெற்றிபெற்றால் அந்தப் படத்தின் தயாரிப்பாளர்கள், வினியோகஸ்தர்கள் காட்டில் பண மழை பொழிகிறது. அந்த நடிகரின் முந்தைய இரு படங்கள் பெற்ற தோல்வி மறக்கப்படுகிறது. மீண்டும் அவர் சம்பளம் உயர்கிறது. அடுத்து வரக்கூடிய ஹிட்டையும் அதனால் கிடைக்கும் லாபத்தையும் மனதில் கொண்டு அவர் கேட்கும் பணம் தரப்படுகிறது. கிட்டத்தட்ட சூதாட்டத்துக்கு இணையான இந்த விளையாட்டு தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கிறது.
இரண்டு ஆண்டுகளில் ஒரு நடிகரின் படங்கள் பெறும் வெற்றி, தோல்வி, லாப, நஷ்டம் ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு அவரது சம்பளத்தை நிர்ணயிப்பதே பொருத்தமாக இருக்கும். ஆனால் இந்த ஏற்பாட்டுக்கு எல்லாத் தயாரிப்பாளர்களும் ஒத்துழைக்க வேண்டும். ஒரு சிலர் மீண்டும் இந்தச் சூதாட்டத்தில் இறங்கினால் மீண்டும் நிலைமை பழையபடியே ஆகிவிடும். தயாரிப்பாளர்கள் ஒன்றுபட்டு ஒரு முடிவை எடுத்து அதில் உறுதியாக நிற்பது சாத்தியமாகுமா என்பதுதான் பெரிய கேள்வி.
பிரச்சினை சம்பளம் மட்டுமல்ல
தயாரிப்பாளர்கள் சம்பளத்தை அள்ளி வழங்கினாலும் சில நடிகர்கள் மற்றும் பல முன்னணி நடிகைகள் படத்தை விளம்பரப்படுத்த முன்வருவதே இல்லை. அஜித், ஜெய், நயன்தாரா, தமன்னா, காஜல் அகர்வால், சமந்தா போன்ற பல நட்சத்திரங்கள் நடித்து முடித்துவிட்டு அடுத்த படத்துக்குச் சென்றுவிடுவார்கள். நடித்து முடித்த படம் வெளியானதா, எவ்வளவு வியாபாரம் ஆகியிருக்கிறது, என்ன நடந்தது என்பதை இவர்கள் கண்டுகொள்வதே இல்லை என்று தயாரிப்பாளர்கள் வட்டாரத்தில் சொல்கிறார்கள். விளம்பரப்படுத்துவதற்கு நடிகர்களை அழைத்து வருவதைக் காட்டிலும் நடிகையை அழைத்து வருவதற்குத் தயாரிப்பாளர் படும்பாடு சிரமத்திலும் சிரமம் என்றும் சொல்கிறார்கள்.
‘நவீன சரஸ்வதி சபதம்’ படத்தை விளம்பரப்படுத்த ஜெய் வரவே இல்லை. ஒரு கட்டத்தில் தயாரிப்பு நிறுவனம், படத்தின் விளம்பரங்களில் இருந்து அவருடைய பெயரை நீக்கிவிட்டுப் படத்தின் பெயரை மட்டும் போட்டது.
பேச்சுவார்த்தை வரை போய், விளம்பரங்களில் ஜெய் பெயரைப் போட்டார்கள், ஆனால் விளம்பரப்படுத்த ஜெய் வரவே இல்லை. இப்போது பல படங்களில் நாயகனாக நடித்துவந்தாலும், ஜெய் எப்போதுமே விளம்பரப்படுத்துவதில் பங்கேற்க மாட்டார் என்பது எழுதப்படாத சட்டம். இதில் முதன்மையாக இருப்பவர் அஜித். என் படங்களை எப்போதுமே நான் விளம்பரப்படுத்த மாட்டேன் என்று வெளிப்படையாக அறிவித்துவிட்டார் அஜித்.
கை கொடுக்கும் நட்சத்திரங்கள்
சில நடிகர்களுக்கு அதிகமாகச் சம்பளம் கொடுக்கத் தயாரிப்பாளர்கள் தயாராகவே இருக்கிறார்கள். காரணம் அவர்களுடைய உதவி. சூர்யா, ஆர்யா, தனுஷ், விமல் உள்ளிட்ட சில நடிகர்கள் இறுதிக் கட்டத்தில் தங்களது படங்களுக்கு என்ன பிரச்சினை வந்தாலும் கூடவே இருந்து என்ன உதவிகள் வேண்டுமோ செய்து கொடுக்கிறார்கள். விமலும் ஆர்யாவும் சில படங்களுக்கு இதுபோன்ற உதவிகளைச் செய்திருக்கிறார்கள். வெளியிடுவதில் சிக்கல் எழுந்தபோது, வாங்கிய சம்பளத்தைவிட அதிகமாகவே கொடுத்துத் தயாரிப்பாளர்களுக்கு உதவியிருக்கிறார்கள்.
பல நடிகர்கள் இப்போது தயாரிப்பாளர்களாக மாறிவருகிறார் கள். ஒரு நடிகர் ஒரு படம் தயாரித்தால், அவருக்குச் சம்பளம் என்பது கிடையாது. பிறகு எப்படி அவருக்கு வருமானம்? இயக்குநர், மற்ற நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் எனச் சம்பளம் மற்றும் படப்பிடிப்புக்கு ஆகும் செலவு 25 கோடி என வைத்துக்கொள்வோம். படத்தின் திரையரங்கு உரிமைக்கான வியாபாரப் பேச்சுவார்த்தையை நடிகர் 35 கோடியில்தான் ஆரம்பிப்பார். 35 கோடி முதல் 40 கோடி திரையரங்கு உரிமை வியாபாரம், வெளிநாட்டு உரிமை, இசை உரிமை, தொலைக்காட்சி உரிமை எனக் கணக்கிட்டால், நடிகருக்கு நல்ல லாபம்தான்.
இதில் லாபம் இருப்பதைப் போலவே ரிஸ்க்கும் இருக்கிறது. சில படங்கள் சரியாக விலைபோகாது. விலைபோனாலும் சரியாக ஓடாது. அந்நிலையில் அந்த நடிகர் நடிக்கும் அல்லது தயாரிக்கும் அடுத்த படத்துக்கான வியாபாரம் பாதிக்கப்படும். அப்போது அவர் தன் சம்பளம் அல்லது தன் படத்துக்கான விலையில் சமரசம் செய்துகொள்ள வேண்டியிருக்கும். இதன் மூலம் அவர் தயாரிப்பாளர்களுக்கு உள்ள கஷ்டங்களைப் புரிந்துகொள்ள ஒரு வாய்ப்பும் கிடைக்கிறது.
தற்போதுள்ள நடிகர்கள் தயாரிப்பாளர்கள் படத்தை வெளியிட எவ்வளவு சிரமப்படுகிறார்கள் என்பதைத் தெரிந்துகொண்டால் மட்டுமே தயாரிப்பாளர்களுக்கு விடிவு காலம் என்பது உண்டு என்பதே தயாரிப்பாளர்களின் ஒட்டுமொத்த மனக் குமுறல்.