மோடி-ஜெயலலிதா சந்திப்பு. 2016 தேர்தலுக்கு அச்சாரமா?
தேசிய கைத்தறி தின விழாவுக்காக சென்னை வந்த பாரத பிரதமர் நரேந்திரமோடி முதல்வர் ஜெயலலிதாவை அவருடைய போயஸ் தோட்ட இல்லத்தில் சந்தித்து பேசியதோடு அவருடன் மதிய விருந்தும் சாப்பிட்டுள்ளார். பூரண மதுவிலக்கு கோரி தமிழக அரசை எதிர்த்து தமிழக பாஜக தலைவர்கள் தீவிரமாக போராடி வரும் நிலையில் பிரதமர், முதல்வரை சந்தித்துள்ளது தமிழக அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் வல்லுனர்கள் கருத்து கூறுகின்றனர். மாநில முதல்வரை விட அதிகாரம் மிக்க பதவியில் உள்ள பிரதமர் ஒருவர், புரட்டோகால் மரபுப்படி அந்தஸ்தில் குறைந்த மாநில முதல்வர் ஒருவரை வீடு தேடி சென்று சந்திப்பது அரசியல் வட்டாரத்தில் வியப்பாகவே பார்க்கப்படுகிறது
37 மக்களைவை எம்.பிக்கள் மற்றும் 11 மாநிலங்களவை எம்.பிக்களை தன்வசம் வைத்துள்ள அதிமுக, இந்திய அளவில் பாஜகவுக்கு அடுத்தபடியாக அதிக எம்.பிக்களை வைத்துள்ள கட்சியாக திகழ்கிறது. இந்நிலையில் அதிமுகவை அனுசரித்து போகவும், வரும் 2016ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தல் கூட்டணிக்கு அச்சாரமாகவும் இந்த சந்திப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
இரு தலைவர்களும் என்ன பேசிக்கொண்டார்கள் என்பது குறித்த தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை என்றபோதிலும், இந்த சந்திப்பு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. முக்கியமாக சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா விடுவிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணையில் உள்ள நிலையில், பிரதமரே ஜெயலலிதாவின் வீடு தேடி சென்று சந்தித்திருப்பது, அரசியல் வட்டாரத்தில் சலசலப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தி உள்ளது. ஆனால் அதே சமயம் ஜெயலலிதாவை பொறுத்தவரை இந்த சந்திப்பு அவருக்கு அரசியல் ரீதியில் பலத்தை பெற்றுக்கொடுத்துள்ளது.
மேலும் கூட்டணி கட்சி தலைவர்களான ராமதாஸ், விஜயகாந்த், வைகோ அவர்களை சந்திப்பில் பிரதமர் ஆர்வம் காட்டவில்லை என்றும் கூறப்படுவதால், வரும் தேர்தலில் இந்த கூட்டணி நீடிக்காது என்றே கூறப்படுகிறது.
[carousel ids=”69480,69481,69483,69476,69517″]