தினசரி 20 ரூபாய். ஹெல்மெட்டை வாடகைக்கு விடும் இளைஞர்

தினசரி 20 ரூபாய். ஹெல்மெட்டை வாடகைக்கு விடும் இளைஞர்

helmetசென்னை உயர்நீதிமன்ற உத்தரவால் தமிழகத்தில் கடந்த ஜூலை 1ஆம் தேதி இருந்து இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு கட்டாயம் ஆகிவிட்டது. ஒரே நேரத்தில் அனைவரும் ஹெல்மெட் கடையை நோக்கி குவிந்ததால், திடீரென ஹெல்மெட்டின் விலை இருமடங்காக மாறியது. இருப்பினும் வேறு வழியின்றி போலீஸார் தொந்தரவுக்கு பயந்து பலர் அதிக விலை கொடுத்து வாங்கி சென்றனர். இந்நிலையில் உளூந்தூர்பேட்டையை சேர்ந்த ஒரு இளைஞர் தரமான ஹெல்மெட்டுக்களை வாங்கி வாடகைக்கு விடும் பிசினஸை ஆரம்பித்துள்ளார். நாள் ஒன்றுக்கு வாடகையாக ரூ.20 மட்டுமே இவர் வசூலிக்கின்றார். ஹெல்மெட் இல்லாமல் சென்று போலீஸில் பிடிபட்டு அபராதம் செலுத்துவதற்கு பதிலாக ரூ.20 கொடுத்து இவரிடம் பலர் ஹெல்மெட்டுக்களை வாடகைக்கு பெற்று செல்கின்றனர்.

இதுகுறித்து தம்பிதுரை என்ற அந்த இளைஞர் கூறியதாவது: ”’ஹெல்மெட் கட்டாயமாக்கிய உடனே நானும் ஹெல்மெட் வாங்க கடைக்கு போனேன். 550 ரூபாய்க்கு வித்துகிட்டு இருந்த ஹெல்மேட்டை 1,100 ரூபாய்க்கு வித்தாங்க. ஒரே இரவுல ஹெல்மெட் விலை இரண்டு மடங்கு உயர்ந்திருதுச்சு. என்ன செய்வதுனு தெரியாம இருந்த நேரத்தில், டெல்லியில் இருக்கற என்னோட மாமாகிட்ட இந்த விஷயத்தை சொன்னேன். அவர் உடனே, அங்க தரமான ஐ.எஸ்.ஐ ஹெல்மெட் 650 ரூபாய்க்கு கிடைக்குதுனு சொல்லி எனக்கு மட்டுமல்லாம என்னொட பிரண்ட்ஸ்க்கும் ஹெல்மெட் வாங்கி அனுப்பினாரு.

என்னை போல அதிக விலை கொடுத்து ஹெல்மெட் வாங்க முடியாம எங்க ஊர்ல இருக்கிற ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு படாதபாடு பட்டுக்கிட்டு இருந்தாங்க. அப்பதான் எனக்கு, ஏன் தரமான ஹெல்மெட்டை வாங்கி நம்ம கிராம மக்களுக்கு வாடகைக்கு கொடுக்க கூடாதுனு ஒரு யோசனை தோனுச்சு. உடனே என் மாமாகிட்ட சொல்லி டெல்லியில இருந்து 15 தரமான ஐ.எஸ்.ஐ. ஹெல்மெட்களை வாங்கி அனுப்ப சொன்னேன்.

அவரும் நான் கேட்டப்படி அங்க வாங்கி எனக்கு அனுப்பினார். அந்த பதினைச்சு ஹெல்மெட்டை இப்ப எங்க ஊர் மக்களுக்கு வாடகைக்கு விட்டுட்டு இருக்கேன். ஹெல்மெட் கேட்டு வர்றவங்ககிட்ட 100 ரூபாய் வாங்கிகிட்டு ஹெல்மெட்டை கொடுப்பேன். அவங்க திரும்ப கொடுக்கும்போது வாடகையை கழிச்சிகிட்டு மிச்ச பணத்தை திருப்பி கொடுத்துடுவேன். நான் வச்சிருக்க ஹெல்மெட் தரமா இருக்கறதால, சிலர் சொந்தமாகவும் வாங்கிட்டும் போறாங்க. நான் இதை பிசினசா செஞ்சாலும், எங்க கிராம மக்களுக்கு குறைந்த விலையில் சேவை செய்வதா நினைக்கிறேன்” என்கிறார் தம்பிதுரை.

இதுபோன்ற கடைகள் சென்னை போன்ற நகரங்களிலும் ஆரம்பித்தால் ஹெல்மெட் வாங்காதவர்கள், ஹெல்மெட்டை மறந்துவிட்டு போகிறவர்கள் பயன்பெறுவார்கள் என்று கூறப்படுகிறது.

Leave a Reply