அதிமுக-பாஜக கூட்டணி? 40 தொகுதிகள் தர ஜெயலலிதா சம்மதித்தாரா?
பாரத பிரதமர் நரேந்திர மோடியின் சென்னை பயணத்தில் முதலில் முதல்வரை சந்திக்கும் திட்டம் இல்லையாம். ஆனால் முந்தைய நாள் மாலை திடீரென முதல்வரின் சந்திப்பு உறுதிப்படுத்தப்பட்டதாகவும், இந்த சந்திப்பில் அதிமுக – பாஜக கூட்டணி இறுதி செய்யப்படும் என்றும் அரசல்புரசலாக செய்தி வெளியானது.
இதை உறுதிப்படுத்துவது போல் தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது. நேற்றைய பேச்சுவார்த்தையில் பாரதிய ஜனதா கட்சிக்கு 40 தொகுதிகளை ஒதுக்க அ.தி.மு.க. ஒப்புக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால் அதிமுகவிடம் பாஜக 100க்கும் அதிகமான தொகுதிகளை கேட்டதாகவும், ஜெயலலிதா அதற்கு ஒப்புக்கொள்ள மறுத்து, கடந்த தேர்தலில் தே.மு.தி.க.வுக்கு கொடுத்த தொகுதிகளை மட்டுமே கொடுக்க முடியும் என்றும், அதே நேரத்தில் இந்த இரு கட்சிகளை தவிர வேறு எந்த கட்சியும் கூட்டணியில் சேர்த்து கொள்ளப்படாது என்றும் முதல்வர் பிரதமரிடம் உறுதியாக கூறியதாக கூறப்படுகிறது. இந்த கூட்டணிக்கு மூளையாக செயல்பட்டவர் சோ என்றும் அதற்கு நன்றி தெரிவிக்கவே பிரதமர் சோவை நேரில் சந்தித்தார் என்றும் கூறப்படுகிறது.
அதிமுக-பாஜக கூட்டணி கிட்டத்தட்ட உறுதியாகிவிட்ட நிலையில் தற்போது தேமுதிக, மதிமுக ஆகிய கட்சிகள் யாரிடம் கூட்டணி சேருவது என்ற சிக்கலில் உள்ளது. பாமக ஏற்கனவே திராவிட கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்று முடிவு செய்துவிட்டதால் தேமுதிக, மதிமுக ஆகிய இரு கட்சிகளுக்கும் இப்போது இருக்கும் ஒரே வாய்ப்பு திமுக கூட்டணிதான். ஆனால் திமுக கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், ஆகிய இரண்டு கட்சிகளும் ஏற்கனவே இடம்பெறும் என்று கூறப்படுவதால் தேமுதிகவுக்கு குறைந்த அளவு தொகுதிகளே கிடைக்கும் என கூறப்படுகிறது.
மேலும் 2ஜி உள்பட பல பிரச்சனைகளில் சிக்கி தவிக்கும் திமுகவுடன் கூட்டணி அமைத்தால் எந்த அளவுக்கு அது வெற்றி கூட்டணியாக இருக்கும் என்றும் தேமுதிக, மதிமுக ஆலோசனை செய்து வருகிறது. எது எப்படியோ நேற்றைய பிரதமர்-முதல்வர் சந்திப்புக்கு பின்னர் தமிழக அரசியல் வட்டாரங்கள் சுறுசுறுப்பாகிவிட்டது என்பது மட்டும் உண்மை.