அமெரிக்க அதிபரானவுடன் ஓரின திருமணத்திற்கு அனுமதி கொடுத்த 6 நீதிபதிகளை நீக்குவேன். பாபிஜிண்டால் அதிரடி
2016ஆம் ஆண்டுடன் அமெரிக்க அதிபர் ஒபாமாவின் பதவிக்காலம் முடிவடைவதை அடுத்து அதிபர் தேர்தலுக்கான பரபரப்பு அந்நாட்டில் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அமெரிக்க அதிபர் வேட்பாளர் தேர்தலில், குடியரசு கட்சி சார்பில் போட்டியிடும், லூசியானா மாகாண கவர்னரும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான, பாபி ஜிண்டால் போட்டியிட உள்ளார். அவர் நேற்று தனது பிரச்சாரத்தில், ”நான் அமெரிக்க அதிபரானால், சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளில், ஆறு பேரை நீக்குவேன்,” என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
அட்லாண்டா மாகாணம், ரெட் ஸ்டேட் நகரில் நேற்று பேசிய அவர், ஓரினச்சேர்க்கையாளர்களின் திருமணத்திற்கும், ‘ஒபாமா கேர்’ என்ற சுகாதார காப்பீட்டு மானியத்திற்கும், சுப்ரீம் கோர்ட் அனுமதி வழங்கியுள்ளது. சுப்ரீம் கோர்ட்டை மூடுவதை விட, அதில் உள்ள ஒன்பது நீதிபதிகளில், ஆறு பேரை நீக்கி விடலாம். குறிப்பாக, முன்னாள் ஜனாதிபதிகள் ரொனால்டு ரீகன், ஜார்ஜ் புஷ் ஆகியோர்களால் நியமனம் செய்யப்பட்டு தற்போது சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக உள்ள, ஜான் ராபர்ட்ஸ் ஜூனியர் மற்றும் நீதிபதி அந்தோணி கென்னடி ஆகியோர் உள்ளிட்ட, ஆறு நீதிபதிகளை நீக்கி விடலாம் என்று கூறியுள்ளார்.
‘ஒபாமா கேர்’ மானியம், ஓரின திருமணம் தொடர்பான வழக்குகளில் அவற்றை ஆதரித்து, ராபர்ட்சும், கென்னடியும் தீர்ப்பு வழங்கியிருந்தனர். இந்த புதிய மாற்றங்களை சகித்துக் கொள்ள முடியாத பாபி ஜிண்டால், இந்த தீர்ப்புகளை கடுமையாக சாடி வருவது குறிப்பிடத்தக்கது.