அமர்நாத் பனிலிங்க பாதையில் திடீர் நிலச்சரிவு. பக்தர்கள் அவதி
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் அமர்நாத் குகைக்கோயிலில் ஆண்டுதோறும் தோன்றும் பனிலிங்கத்தை தரிசனம் செய்ய லட்சக்கணக்கான பக்தர்கள் ஜம்மு வழியாக பயணம் செய்வது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டும் கடந்த 2 ஆம் தேதி அமர்நாத் யாத்திரை தொடங்கியது. இந்த யாத்திரையில், மலைப்பாதை வழியாக நடந்து செல்ல 2 லட்சத்து 4 ஆயிரத்து 508 பேரும், ஹெலிகாப்டர் மூலம் பல்டாக் மற்றும் பாஹல்காம் பகுதியில் இருந்து பஞ்தர்னியை சென்றடைய 22 ஆயிரத்து 104 பேரும் முன்பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் மலைப்பாதை வழியாக பயணம் செய்ய நாட்டின் பல பகுதிகளில் இருந்து வந்திருந்த சுமார் 3 லட்சத்து 33 ஆயிரத்து 507 யாத்ரீகர்கள், அமர்நாத் குகைக்கோயிலில் பனிலிங்கத்தை இதுவரை தரிசனம் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், அங்கு பெய்துவரும் பெருமழையினால் சுமார் 300 கிலோ மீட்டர் நீளமுள்ள ஜம்மு-காஷ்மீர் நெடுஞ்சாலையில் நேற்று திடீரென நிலச்சரிவு ஏற்பட்டதால் அந்த வழியாக சென்று கொண்டிருந்த ஆயிரக்கணக்கான வாகனங்கள் மேற்கொண்டு முன்னேற முடியாமல் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
நிலச்சரிவால் பாத்ப்பு அடைந்த பாதையை சீரமைக்கும் முயற்சியில் சாலைப் பணியாளர்களுடன் நூற்றுக்கணக்கான ராணுவ வீரர்களும் ஈடுபட்டு வருகின்றனர். இந்தச் சாலை சீரடையும்வரை ஜம்மு மலையடிவார முகாமில் இருந்து புறப்பட்டுச் செல்லும் அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இன்னும் ஓரிரு நாட்களில் போக்குவரத்து சீரடைந்த பின்னர் அமர்நாத் யாத்திரை தொடங்கும் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.