பூரண மதுவிலக்கை வலியுறுத்தி வரும் 13ஆம் தேதி உண்ணாவிரதம். விஜயகாந்த் அறிவிப்பு
தமிழகத்தில் பூரண மதுவிலக்கின் அவசியத்தை வலியுறுத்தி திமுக உள்பட அனைத்து எதிர்க்கட்சிகளும் தமிழக அரசை வலியுறுத்தி வருகின்றது. இதில் தேமுதிக சமீபத்தில் சென்னையில் மனித சங்கிலி போராட்டம் நடத்தியபோது அதன் தலைவர் விஜய்காந்த் உள்பட ஆயிரக்கணக்கான தேமுதிக கட்சியினர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டனர். இந்நிலையில் தேமுதிக தனது அடுத்தகட்ட போராட்டத்தை இன்று அறிவித்துள்ளது.
இதுகுறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று விடுத்த அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது:
மதுவால் கணவனை இழந்த மனைவியும், மகனை இழந்த பெற்றோரும், தந்தையை இழந்த குழந்தைகளும் என பல குடும்பங்கள் கஷ்டபடுகின்றன. சமீபத்திய ஆய்வில் தமிழகத்தில் மட்டும் மது அருந்தும் பழக்கத்தால், கல்லீரல், சிறுநீரகம், இதயம் போன்றவைகள் பாதிக்கப்பட்டு, சுமார் 65 ஆயிரம்பேர் உயிருக்குபோராடும் நிலையிலும், கடந்த பத்தாண்டுகளில் குடிப்பழக்கத்தால் மட்டும் சுமார் இரண்டு லட்சம்பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரியவருகிறது. கொடிய விஷத்திற்கு சமமான மதுவை ஒழிக்கவேண்டுமென்ற போராட்டத்தில் காந்தியவாதி சசிபெருமாள் உயிரை இழந்தும், கல்நெஞ்சம் கொண்ட அரசாக, இந்த அதிமுக அரசு இருக்கிறது.
தமிழகத்தில் மதுவை அறவே ஒழிக்கவேண்டும், அதற்கு பூரண மதுவிலக்கு அமல்படுத்தவேண்டும் என்பதுதான் தேமுதிகவின் கொள்கையாகும். தமிழக மக்களும் அதைத்தான் விரும்புகிறார்கள். எனவே பூரணமதுவிலக்கை அமல்படுத்தவேண்டும். அதற்கு தேவையான நடவடிக்கைகளை அதிமுக அரசு உடனடியாக துவங்கவேண்டும் என்பதை வலியுறுத்தி, சென்னை கோயம்பேட்டிலுள்ள தேமுதிக தலைமை கழக வளாகத்தில், வருகின்ற 13.08.2015 வியாழக்கிழமை காலை 8 மணிமுதல் மாலை 5 மணி வரை தேமுதிக சார்பில் ஒருநாள் அடையாள “உண்ணாவிரத அறப்போராட்டம்” கழகத்தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ளது. அது சமயம் தேமுதிகவின் நிர்வாகிகள், தொண்டர்கள், இளைஞர்கள், மகளிர்கள், மாணவர்கள், தொழிலாளர்கள், வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் பெருந்திரளாக வருகைதந்து உண்ணாவிரத அறப்போராட்டத்தில் கலந்துகொண்டு, மாபெரும் வெற்றிபெறச் செய்யவேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.