உதயநிதி ஸ்டாலினுடன் சிம்பு ரசிகர்கள் மோதல். ‘வாலு’ ரிலீஸாகுமா?
சிம்பு நடித்த ‘வாலு’ திரைப்படம் பல தடைகளை தாண்டி ஒருவழியாக விஜய்யின் உதவியால் வரும் 14ஆம் தேதி ரிலீஸாகவுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இம்முறை விஜய் தலையிட்டுள்ளதால் கண்டிப்பாக படம் வெளிவந்துவிடும் என அனைவரும் நம்பிக்கொண்டிருக்கும் நிலையில் திடீரென உதயநிதி ஸ்டாலின் வடிவில் இந்த படத்திற்கு சிக்கல் எழுந்துள்ளதாக ஃபேஸ்புக் மற்றும் டுவிட்டரில் செய்திகள் வலம் வந்து கொண்டிருக்கின்றது.
இதே தேதியில் உதயநிதி ஸ்டாலின் ஆர்யாவின் ‘வாசுவும் சிவாவும் ஒண்ணாப் படிச்சவங்க’ திரைப்படத்தை வெளியிடுகிறார். அதற்காக அவர் சென்னை உள்பட தமிழகத்தின் முக்கிய தியேட்டர்களை கைவசப்படுத்தியுள்ளதாகவும், சிம்புவின் ‘வாலு’ படத்திற்கு தேவையான தியேட்டர்கள் இன்னும் புக் ஆகவில்லை என்றும் கூறப்படுகிறது.
எனவே உதயநிதிஸ்டாலினால் வாலு படம் வெளியாவதில் சிக்கல் என்று சிம்பு ரசிகர்களும், உதயநிதியை தேவையில்லாமல் சீண்ட வேண்டாம் என்று உதயநிதி ரசிகர்களும் டுவிட்டரில் வெறித்தனமாக மோதி வருகின்றனர். இதற்கென சிம்பு ரசிகர்கள் ஹேஷ்டேக் ஒன்றை ஆரம்பித்து அதில் உதயநிதியை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.
இதேபோல் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கார்த்தி நடித்த ‘கொம்பன்’ திரைப்படம் வெளிவந்த நேரத்திலும் உதயநிதி தடையாக இருக்கிறார் என்கிற செய்திகள் வந்தன, அப்போது அதைக் கடுமையாக மறுத்து உதயநிதி அறிக்கை வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.