மோடி-நிதீஷ்குமார் இடையே பீகாரில் நடைபெறும் மரபணு அரசியல்.

மோடி-நிதீஷ்குமார் இடையே பீகாரில் நடைபெறும் மரபணு அரசியல்.  

modi and niteshபாரத பிரதமர் நரேந்திர மோடி கடந்த 25ஆம் தேதி பீகாரில் உள்ள முசாபர்பூர் நகரில் பேசியபோது, “நிதிஷ்குமாரின் மரபணுவில் ஏதோ பிரச்சினை உள்ளது. அவருடைய மரபணு ஜனநாயகத்தின் மரபணு போல் இல்லை. ஜனநாயகத்தில் அரசியல் எதிரிகளுக்கும் மரியாதை தரவேண்டும்” என கூறியிருந்தார்.

பிரதமரின் இந்த கருத்துக்கு அதிரடியாக பதிலளித்த பீகார் முதல்வர் நிதீஷ்குமார் “உங்கள் விமர்சனம் எனது குடும்ப பரம்பரை பற்றியதாக இருந்தாலும் பிகார் மக்கள் அவமதிக்கப்பட்டதாகவும் மாநிலத்தின் பெருமை குலைக்கப்பட்டதாகவும் எங்கள் மாநில மக்கள் கருதுகின்றனர். பீகார் மக்கள் மீது உங்களுக்கும் உங்கள் கட்சிக்கும் காழ்ப்புணர்வு இருக்கலாம் என்ற கருத்தை இது நம்பும்படியாகச் செய்கிறது. எனவே இந்த வார்த்தைகளை திரும்பப் பெறுவது குறித்து நீங்கள் பரிசீலனை செய்ய வேண்டும். மக்களின் உணர்வுகளுக்கு நீங்கள் மதிப்பு கொடுத்து இதை திரும்பப் பெறுவதால் உங்கள் மீதான மரியாதை உயரும் என்றே கருதுகிறேன்” என்று தனது டுவிட்டரில் கூறியிருந்தார்.

ஆனால் நிதீஷ்குமாரின் இந்த கருத்துக்கு பிரதமர் தரப்பில் இருந்தோ, பாஜகவின் தரப்பில் இருந்தோ எவ்வித பதிலும் வரவில்லை. எனவே மீண்டும் இன்று காலை நிதீஷ்குமார் தனது டுவிட்டரில், “அவதூறு விமர்சனத்தை பிரதமர் மோடி திரும்பப்பெறவில்லை. எனவே, இப்பிரச்சினையை மக்கள் மன்றம் மூலம் முன்னெடுத்துச் செல்கிறேன். மரபணு கருத்தை எதிர்த்து 50 லட்சம் பிஹார் மக்கள் தங்கள் மரபணு மாதிரியை பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பிவைப்பர். கையெழுத்து இயக்கமும் நடத்தப்படும். வரும் 29-ம் தேதி மாநில அளவிலான சுயமரியாதை பேரணியும் நடைபெறும்” என அறிவித்துள்ளார்.

மரபணு விமர்சனத்தை வைத்து நடக்கும் அரசியல், பிகார் தேர்தலில் முக்கிய பங்களிக்கும். இதை முன்னிலைப்படுத்தி மோடிக்கு எதிரான அலையை ஏற்படுத்த நிதிஷ்குமார் முயற்சி செய்கிறார் என அரசியல் நோக்கர் நவாக் கிஷோர் சவுத்ரி தெரிவித்துள்ளார்.

Leave a Reply