மோசமான நிலையில் தமிழக அரசு பேருந்துகள். விஜயகாந்த் அறிக்கை
தமிழகஅரசு பேருந்துகள் தொடர்ந்து விபத்திற்குள்ளாவதும், நடுவழியில் பழுதாகி நிற்பதும், பேருந்தின் சக்கரம் கழண்டு ஓடுவதும், மேற்கூரை பெயர்ந்து விழுவதுமென மோசமான நிலையில் உள்ளன. போக்குவரத்து துறையின் அமைச்சர் மற்றும் அதிகாரிகளின் வற்புறுத்தலால், வட்டார போக்குவரத்து அதிகாரிகள் ஒவ்வொரு ஆண்டும் அரசு பேருந்துகளை உரிய முறையில் ஆய்வு செய்யாமல், அதில் உள்ள தவறுகளையும், பழுதுகளையும் சுட்டிக்காட்டாமல், சிலநேரங்களில் பேருந்தை பார்க்காமலேயே பொதுமக்களின் போக்குவரத்திற்கு ஏற்றதென தகுதிச்சான்று வழங்குவதால்தான் இதுபோன்ற நிலை உள்ளதாக அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் பேருந்தில் ஏற்படும் அனைத்து பழுதுகளுக்கும், அரசு போக்குவரத்து நிர்வாகம் தொழிலாளர்கள்மீது பழிபோடுவதாக கூறுகிறார்கள்.
பள்ளிக் குழந்தைகளை அழைத்துச்செல்லும், தனியார் பள்ளி பேருந்துகளை ஆய்வுசெய்ய தமிழகஅரசு தனிக்குழு அமைத்துள்ளதை போலவே, அரசு பேருந்துகளுக்கும் தனிக்குழுக்களை அமைத்து, அக்குழுவின் பரிந்துரைக்குப் பிறகே, வட்டார போக்குவரத்து அலுவலர் பேருந்திற்கு தகுதிச்சான்று வழங்கவேண்டுமென தொழிலாளர்கள் கோரிக்கை விடுக்கின்றனர். அதுபோன்ற நடைமுறையை கொண்டுவந்தால், ஓட்டுனர் இருக்கை சரியில்லாமல் சென்னை ஜெமினி மேம்பாலத்தில் பேருந்து கவிழ்ந்தது போன்ற விபத்துகளை தடுத்திருக்கமுடியும்.
மேலும் பேருந்தின் முகப்புவிளக்கும் அதன் டிம், பிரைட் சுவிட்சும், பின்புற சிவப்பு விளக்கும், இடவலம் பார்க்கும் கண்ணாடிகளும் சரியாக இருந்தாலே, பெரும்பாலான பேருந்து விபத்துகளை தடுத்திருக்கமுடியும். எனவே அதிமுக அரசு பொதுமக்களின் உயிரோடு விளையாடாமல், பேருந்துகளுக்கு அவசிய அடிப்படை தேவையான பராமரிப்புப்பணிகளில் மெத்தனம் காட்டாமல், அதற்கு முக்கியத்துவம் அளித்து, பேருந்துகளை உடனுக்குடன் சரியான முறையில் பராமரிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்கவேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.