செப்டம்பரில் பிரதமர் மோடியை சந்திக்கிறார் “கூகுள்” சுந்தர் பிச்சை
சென்னையில் பிறந்து வளர்ந்து இன்று உலகமே போற்றும் வகையில் கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ள சுந்தர் பிச்சை பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க விரும்புவதாக சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
கூகுள்’ தலைமை செயல் அதிகாரி பதவியில் தமிழரான சுந்தர் பிச்சை நியமிக்கப்பட்டுள்ளதை அறிந்ததும் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார். பிரதமரின் வாழ்த்துக்கு நன்றி தெரிவித்த சுந்தர் பிச்சை அவரை சந்திக்க விருப்பம் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் புகழ் பெற்ற ஆல்ஃபபெட் நிறுவனத்தின் ஒரு அங்கமாக இருக்கும். ‘கூகுள்’ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பதவிக்குச் சென்னையைச் சேர்ந்த தமிழர் சுந்தர் பிச்சை நியமிக்கப்பட்டுள்ளார். இது உலகில் உள்ள ஒவ்வொரு தமிழருக்கும் கிடைத்துள்ள கௌரவம் ஆகும்.
இது குறித்து தனது ‘டுவிட்டர்’ வலைத்தளத்தில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ‘‘வாழ்த்துகள் சுந்தர் பிச்சை. கூகுளில் உங்கள் புதிய பங்களிப்புக்கு எனது நல்வாழ்த்துகள்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.
பிரதமரின் இந்த வாழ்த்துக்கு நன்றி தெரிவித்த சுந்தர் பிச்சை, அவரை சந்திக்கும் வாய்ப்பை எதிர்பார்த்து காத்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார். பிரதமர் நரேந்திரமோடி, வரும் செப்டம்பர் மாதம் அமெரிக்கா செல்ல இருக்கிறார். அங்கு முக்கிய நிறுவன அதிகாரிகளை சந்திக்க இருக்கும் மோடியை சுந்தர் பிச்சையும் சந்திக்க விருப்பம் தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பு வரலாற்று சிறப்பு வாயந்த சந்திப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.