பிரபல திரைப்பட இயக்குனர் வி.சேகர் திடீர் கைது. ரூ.80 கோடி சிலைத்திருட்டில் சம்பந்தமா?
பிரபல திரைப்பட இயக்குனர் வி.சேகர் ரூ.80 கோடி சிலைத்திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். போலீஸார் நடத்திய விசாரணையில் அவர் தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களை ஒப்புக்கொண்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னையில் கடந்த மே மாதம் தி.நகர் பகுதியில் ஆட்டோவில் கடத்தப்பட்ட சுமார் ரூ.80 கோடி மதிப்புள்ள சாமி சிலைகள் சிக்கியது. இந்த சிலைகளில் பூதேவி, சீதேவி சிலைகளும், சிவன், பார்வதி சிலைகளும் இருந்தது. இந்த சிலைகள் சவுந்தர்யபுரம் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் கோவிலில் இருந்து திருடியதாக விசாரணையில் தெரியவந்தது.
இந்நிலையில் இந்த சிலை திருட்டு குறித்து போலீஸார் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர். போலீஸாரின் தேடுதல் வேட்டையில் சினிமா தயாரிப்பு நிர்வாகி தனலிங்கம், சென்னை அரசு அச்சக ஊழியர் கருணாகரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில் இந்த சிலை திருட்டுக்கு இயக்குனர் வி.சேகருக்கு தொடர்பு இருப்பதாக திடுக்கிடும் தகவல் தெரிய வந்தது. மேலும் திருடப்பட்ட சிலைகள் அனைத்தும் அவருடைய வீட்டில்தான் ஒளித்து வைக்கப்பட்டதும் தெரியவந்தது.
இதன்பின்னர் நேற்று இரவு வி.சேகரை கைது செய்த போலீஸார் அவரிடம் தீவிர விசாரணை செய்தனர். இந்த விசாரணையில் வி.சேகர், தன்மீது சுமத்தப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுக்களையும் ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. இன்று வி.சேகர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என கூறப்படுகிறது.