பெண்களுக்காகக் குரல் கொடுக்கும் ஹாஷ்டேக்

female_2510115f

இணையத்தில் குறிப்பிட்ட விஷயத்தின் மீது கவனத்தை ஈர்க்க விரும்புபவர்கள் ஒரு ஹாஷ்டேகை உருவாக்கி உலாவவிடுகிறார்கள். பல ஹாஷ்டேகுகள் திட்டமிட்டு உருவாக்கப்பட்டாலும் சில தானாக உருவாகின்றன. இப்படி உருவான ஒரு ஹாஷ்டேக் இணையத்தில் பெண் பொறியாளர்களுக்காகக் குரல் கொடுக்கும் இயக்கமாக மாறியிருக்கிறது. தொழில்நுட்ப உலகில் பெண்களின் இடம் பற்றிய விவாதத்தையும் சூடுபிடிக்க வைத்திருக்கிறது.

‘ஐ லுக் லைக் அன் இன்ஜீனியர்’ எனும் அந்த ஹாஷ்டேக் ஐசிஸ் வென்கர் எனும் ஒரு பெண் பொறியாளரால் இயல்பாக உருவாக்கப்பட்டிருக்கிறது என்பதுதான் விஷயம்.

சான்பிரான்சிஸ்கோவில் உள்ள ஒன் லாஜிக் எனும் நிறுவனத்தில் ஐசிஸ் வென்கர் பணியாற்றுகிறார். அந்நிறுவனம் புதிய பணியிடங்களை நிரப்புவதற்கான விளம்பரம் ஒன்றை வெளியிட்டது. இதில் மாடல்களுக்குப் பதில் தங்கள் ஊழியர்கள் சிலரையே பயன்படுத்தியது. இவர்களில் ஒருவர் ஐசிஸ். அவர், கண்ணாடியையும், ஒன் லாகின் பொறியாளர் எனும் வாசகம் பொறித்த டி ஷர்ட்டையும் அணிந்து அவ்விளம்பரத்தில் போஸ் கொடுத்திருந்தார்.

ஐசிஸ் சற்றும் எதிர்பாராத வகையில் பேஸ்புக், டுவிட்டர் என இணையவெளி முழுவதும் இந்தப் புகைப்படம் பரவி, விவாதம் சூடுபிடித்தது. விவாதத்தின் மையப்பொருள் ஐசிஸின் அழகே. சிலருக்கு இவர் பொறியாளர்தானா என்ற சந்தேகம் உண்டானது. விளம்பர மாடல் இவரெனப் பலர் சந்தேகித்தனர். இவற்றை எல்லாம் பகிர்ந்து கொண்டனர்.

ஐசிஸ் இந்தத் திடீர் வெளிச்சத்தை எதிர்பார்க்கவோ விரும்பவோ இல்லை. விவாதத்தின் கருப்பொருள் அவரைக் கவலைப்படவைத்தது. பெண் பொறியாளர்களைப் பழக்கப்பட்ட ஒரு வரையறைக்குள் வைத்துப் பார்ப்பதை அவர் விரும்பவில்லை.

ஆகவே, மீடியம் வலைப்பதிவு சேவையில் இந்த விஷயம் பற்றி நீள் பதிவு ஒன்றை எழுதினார். தான் பணியாற்றும் நிறுவனத்துக்காக எடுக்கப்பட்ட ஒரு விளம்பரப் படத்தில் தோன்றியதால் இந்த அளவு கவனம் கிடைக்கும் எனத் தான் எதிர்பார்க்கவில்லை என அதில் கூறியிருந்தார். பெரும்பாலானோர் நல்ல விதமாகக் கருத்து தெரிவித்திருந்தாலும் சிலர் எதிர்மறையாகக் கருத்துக் கூறியுள்ளதை அவர் சுட்டிக்காட்டியிருந்தார். பெண் பொறியாளர்கள் பற்றிய ஒரு சார்பு நிலை கொண்ட கருத்துகளைப் பணியிடத்திலேகூட எதிர்கொண்டதைக் குறிப்பிட்டிருந்தார். கருத்து தெரிவித்தவர்கள் நல்லவர்களாக இருந்தாலும் ஒரு ஆண் எனும் வகையில் அவர்கள் மனதில் பெண்கள் பற்றி சமூகத்தால் கட்டமைக்கப்பட்ட எண்ணங்கள் செயல்படுவதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

இந்தக் காரணத்தால் தனக்குக் கிடைத்துள்ள கவனத்தை ஆக்க பூர்வமாகப் பயன்படுத்துவதற்காக ‘ஐ லுக் லைக் அன் இஞ்சினியர்’ என்ற ஹாஷ்டேகை உருவாக்கினார். பெண் பொறியாளர்கள் பற்றிய தவறான எண்ணங்களையும், மாயைகளையும் தகர்க்கும் வகையில் கருத்துகளைப் பகிர்ந்துகொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்திருந்தார். தொழில்நுட்பத் துறையில் உள்ள பெண்கள் பலரும் இந்த ஹாஷ்டேகைப் பயன்படுத்தித் தங்கள் பணி அனுபவம் மற்றும் ஆற்றல் பற்றிய கருத்துகளை டிவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட தளங்களில் பகிர்ந்துகொண்டனர். இந்த எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் பெருகி, இந்த ஹாஷ்டேக் மிகவும் பிரபலமானது. நாசாவில் பணியாற்றும் பெண் விஞ்ஞானிகள் உள்ளிட்ட பலரும் தங்கள் கருத்துகளை வெளியிட்டனர்.

தொழில்நுட்ப உலகின் பெண்களின் நிலை பற்றிய ஆக்கபூர்வமான விவாதத்தை உண்டாக்கும் இணைய இயக்கமாக இந்த ஹாஷ்டேக் உருவாகியிருக்கிறது. இதே பெயரில் ஒரு இணையதளத்தையும் ஐசிஸ் அமைத்திருக்கிறார். இந்த விவாதத்தை மேலும் வளர்த்துப் பெண்கள் மத்தியில் தொழில்நுட்ப ஆர்வத்தை அதிகரிக்க இது உதவும் என அவர் நம்புகிறார்.

Leave a Reply