வரும் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் நடக்கவுள்ள எஸ்எஸ்எல்சி துணைத் தேர்வுக்கு தனித்தேர்வர்கள், தோல்வியுற்ற தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்.
இதுதொடர்பாக முதன்மைக் கல்வி அலுவலர் நா.ராமலிங்கம் வெளியிட்ட அறிக்கை: தனித்தேர்வர்கள் மற்றும் தோல்வியுற்ற தனித்தேர்வர்கள் வரும் 17-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை அலுவலக நாள்களில் பின்வரும் அரசு தேர்வுகள் சேவை மையங்களில் ஆன்லைன் மூலம் பதிவு செய்யலாம்.
ஆண் விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பங்களை ஸ்ரீ அரவிந்தர் ஆங்கிலம மேல்நிலைப்பள்ளி, சாலைத்தெரு, சோலைநகர், முத்தியால்பேட்டையிலும், பெண் விண்ணப்பதாரர்கள் அரசு உயர்நிலைப்பள்ளி, மேட்டுப்பாளையத்திலும் தங்கள் விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் பதிவு செய்யலாம்.
தேர்வுக் கட்டணம்
தனித்தேர்வர்கள் செலுத்த வேண்டிய கட்டணம் ரூ.125-ம், பதிவுக் கட்டணம் ரூ.50, சேர்த்து மொத்தம் ரூ.175, அரசு தேர்வுகள் சேவை மையங்களில் பணமாக செலுத்தவேண்டும்.ஆன்லைனில் விணணப்பத்தை பதிவு செய்த பிறகு மனுதாரருக்கு ஒப்புகைச் சீட்டு தரப்படும். அதில் குறிப்பிட்டுள்ள விண்ணப்ப எண்ணை பயன்படுத்தியே அரசு தேர்வுத்துறை பின்னர் அறிவிக்கும் நாளில் தேர்வுக்கூட அனுமதிச்சீட்டுகளை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
விணணப்பிக்கும் தனித்தேர்வர்களுக்கு புதுச்சேரியில் தேர்வு மையம் ஒதுக்கீடு செய்யப்படும். தேர்வு மைய விவரம், அனுமதிச்சீட்டில் குறிப்பிடப்படும். தனித்தேர்வர்களுக்கு தேர்வு எழுத தற்போது தரப்படும் அனுமதி முற்றிலும் தற்காலிகமானதாகும். அவர்களின் விண்ணப்பம் மற்றும் தகுதி குறித்து ஆய்வு செய்யப்பட்ட பின்னரே தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்றார் ராமலிங்கம்.