சூரிய மின்சக்தியினால் இயங்கும் இந்தியாவின் முதல் விமான நிலையம்
இந்தியாவில் பெருகி வரும் மின் தேவையை கணக்கில் கொண்டு அனைவரும் சோலார் மின்சாரத்தை உபயோகப்படுத்த வேண்டும் என நாடு முழுவதும் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து வரப்படும் நிலையில் முழுக்க முழுக்க சூரிய சக்தியால் விரைவில் இயங்கவுள்ள இந்தியாவின் முதல் விமான நிலையம் என்கிற பெருமையை கொச்சி சர்வதேச விமான நிலையம் அடையவிருப்பதாக செய்திகள் உறுதிப்படுத்தியுள்ளது.
கடந்த 2013 ஆம் ஆண்டிலேயே வருகை டெர்மினலின் மேற்கூரையில் சோலார் பேனல்களை பொருத்தி 100 கிலோ வாட் திறன் கொண்ட சூரிய மின் நிலையத்தை நிறுவிய சாதனை செய்தது கொச்சி சர்வதேச விமான நிலையம். இதனையடுத்து கடந்த மே மாதம், இந்த விமான நிலையத்தில் மொத்தம் 14 மெகாவாட் திறன் அளவுள்ள சூரிய சக்தி மின்சாரத்தை கூட்டப் போவதாகவும் இதற்கான செலவு 55 கோடி என்றும் கொச்சி விமான நிலையம் தெரிவித்திருந்தது. புகழ்பெற்ற நிறுவனமான பாஷ் (Bosch) இதன் பணிகளை மேற்கொண்டது. தற்போது பணிகள் நிறைவு பெற்று 12 மெகாவாட் திறன் கொண்ட நிலையத்தை, நாளை மறுநாள் கேரள முதல்வர் உம்மன் சாண்டி திறந்து வைக்க உள்ளார்.
இந்த சூரிய மின் நிலையத்தின் மூலம் ஒரு நாளில் 50,000 முதல் 60,000 யூனிட்கள் மின்சாரம் உற்பத்தி செய்யலாம். ஆனால், கொச்சி விமான நிலையத்திற்கு ஒரு நாள் மின்சாரத் தேவை 50,000 யூனிட்கள். இதனால் கொச்சி விமான நிலையத்தின் முழு மின்சார தேவையையும் சூரிய மின்சக்தியினால் செயல்படும் என்பது உறுதியாகியுள்ளது. கொச்சி விமான நிலையத்தை போல் நாடு முழுவதும் குறிப்பாக தமிழகத்தில் சூரிய மின்சாரத்தின் மூலம் விமான நிலையங்கள் உள்பட பல முக்கிய இடங்களில் சூரிய மின் நிலையத்தை உபயோகித்தால் கண்டிப்பாக தமிழகத்தில் நிலவி வரும் மின் தட்டுப்பாட்டை குறைக்க முடியும் என கூறப்படுகிறது.