செரிமானத்தை தூண்டக்கூடியதும், வாயு பிரச்னைகளை சரிசெய்ய கூடியதுமான ஓமத்தின் சிறப்புகளை இன்று பார்ப்போம்:
ஓமம் வாயுவை போக்கக் கூடியது. வயிற்றை துன்பப்படுத்தும் வாயுவை வெளித் தள்ளக்கூடியது. செரிமானத்தை தூண்டக் கூடிய ஓமம், நுண்கிருமிகளை அழிப்பதுடன் ரத்தத்தை சுத்தப்படுத்தும். உணவுக்கு மணத்தை தரக்கூடிய ஓமம், உன்னதமான மருந்தாக அமைகிறது.
ஓமத்தை கொண்டு பசியின்மை, செரியாமைக்கான மருந்து தயாரிக்கலாம். ஓமம், சுக்குப்பொடி, மிளகுப்பொடி, ஏலக்காய் அல்லது ஏல அரிசி, அரிசி திப்லி, பனங்கற்கண்டு எடுத்துக்கொண்டு, ஒரு கிராம் ஓமத்துடன், சம அளவு ஏல அரிசி, 2 சிட்டிகை மிளகு பொடி, சிறிது சுக்குப் பொடி, 3 அரிசி திப்லி, தேவையான அளவு பனங்கற்கண்டு அல்லது சர்க்கரை சேர்க்கவும். இவற்றுடன் நீர்விட்டு கொதிக்க வைத்து தேனீர் தயாரிக்கலாம்.
இது, உடல் வலியை போக்க கூடியது. உணவுக் குழாயில் ஏற்படும் பிரச்னையை போக்கும். வயிற்று பொருமலை தீர்க்கும் தன்மை கொண்டது. ஓமம் பூஞ்சை காளான்களை போக்க கூடியது. உள் உறுப்புகளை தூண்டக்கூடிய தன்மை கொண்டது. வயிற்றுபோக்கை சரி செய்யும். காலராவை போக்க கூடியது. ஓமத்தை கொண்டு ஆஸ்துமாவுக்கான மருந்து தயாரிக்கலாம். ஓமம், ஆடாதொடை இலைப்பொடி, கசகசா, பனங்கற்கண்டு, அரிசி திப்லி எடுத்துக்கொள்ளவும்.ஓமம் கால் ஸ்பூன் எடுத்துக்கொள்ளவும். அரை ஸ்பூன் கசகசா, 4 அரிசி திப்லி, கால் ஸ்பூன் ஆடாதொடை இலைபொடி சேர்த்து தண்ணீர் விட்டு கஷாயம் தயாரிக்கவும். அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து பயன்படுத்தலாம். இது, தொண்டை கம்மல், சளியை தடுக்க கூடியது. ஆஸ்துமாவை போக்கவல்லது.
சிறப்புமிக்க ஓமமானது புண் சீல் பிடிப்பதை தடுக்கிறது. முதல் உலகப்போரில் ஓமத்தை வீரர்கள் வைத்திருந்தார்கள். ஓமத்தை பயன்படுத்தியதன் மூலம் அவர்களுக்கு வலி குறைந்தது. வீக்கம் சரியானதாகவும், புண்கள் சீல்பிடிக்காமல் இருந்ததாகவும் வரலாறு கூறுகிறது. வாதத்தை போக்க கூடிய தன்மை கொண்ட ஓமம், உடலுக்கு தேவையான உஷ்ணத்தை கொடுக்க கூடியது. ஓமத்தை கொண்டு வலி, வீக்கத்துக்கான மேல்பூச்சு மருந்து செய்யலாம்.
2 ஸ்பூன் விளக்கெண்ணெயில் ஓமப் பொடியை வதக்க வேண்டும். தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து களி பதத்தில் இறக்கவும். வலி, வீக்கம் உள்ள இடத்தில் இதை தடவினால் வீக்கம், வலி குறையும். ஓமம் ரத்த ஓட்டத்தை தூண்டக்கூடியது. கட்டி இருந்தால் சரி செய்யும். சீல் பிடிக்காமல் கட்டிகள் குணமாகும். ஓமம் பல் வலிக்கான மேல் பூச்சு மருந்தாக பயன்படுகிறது. ஓமப் பொடி, லவங்க பொடி, இந்துப்பு சேர்த்து பல்லுக்கு மேல் அழுத்தி வைத்தால் பல் வலி குறையும். கஷாயமாக செய்து வாய் கொப்பளிக்கலாம். ஈறுகள் வீக்கம், பல் வலி குறையும்.